காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதன் முதலில் சிவபெருமானுக்கு ஓர் இருக்கை அமைப்பு

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதன் முதலில் சிவபெருமானுக்கு ஓர் இருக்கை அமைப்பு

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயிலை நேற்று ஞாயிறன்று பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் காசியிலிருந்து துவக்கி வைத்தார்கள். இந்த ரயிலானது இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று ஜோதிர்லிங்க சிவாலயங்களை இணைத்துச் செல்வதாகும்.

இந்த ரயிலில் உயர்தர சைவ உணவு வழங்கும் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ள உணவறை உள்ளது. மேலும் நல்ல படுக்கை வசதி, நல்ல பராமரிப்பு வசதி மற்றும் பயண காப்புத்திட்டம் என்று பயணம் இனிமையாக அமைய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த ரயிலானது இந்தூர் அருகிலுள்ள ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க தலம், உஜ்ஜயினி மாகாளேஸ்வரர் திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகிய மூன்று ஜோதிர்லிங்க தலங்களையும் இணைத்துச் செல்லும்.

இந்த ரயிலில் சிவபெருமானுக்கு என்று தனியாக ஒரு இருக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு ரயிலில் இறைவனான சிவபெருமானுக்கு ஒரு இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இருக்கையின் மீது கோவில் படம் வரையப்பட்டுள்ளது. யாரும் அறியாமல் அந்த இருக்கையில் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, என்று வடக்கு ரயில்வே செய்தியாளர் திரு தீபக்குமார் தெரிவித்தார்.

மெல்லிய தெய்வீக பாடல்களுடன், ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பாதுகாவலர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சைவ உணவு மட்டும் தான் வழங்கப்படுகிறது. மேலும், ரயில் முழுவதும் 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வாரத்திற்க்கும் மூன்று முறை வாரணாசியிலிருந்து இந்தூர் வரை செல்கிறது.

இந்து கோவில் வருமானத்திலிருந்து மசூதி சர்ச் பராமரிக்க தலா 5 கோடி: ஆத்திரமடைந்த இந்துக்கள்

கோவில் வருமானத்திலிருந்து மசூதி சர்ச் பராமரிக்க தலா 5 கோடி: ஆத்திரமடைந்த இந்துக்கள்

மதசார்பின்மை என்பது அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது, அனைத்தையும் அவரவர்களிடமே கொடுத்து விட வேண்டும். ஆனால், இந்துக்களின் கோவில்களை மட்டும் அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டு மற்ற மதத்தினரின் கோவில்களை அவர்வர்களிடம் ஒப்படைத்துவிட்டுள்ளது எந்த வகையில் மதசார்பின்மை, இது அநியாயம் இல்லையா என்று இந்துக்களில் கோபக்குரல் கடந்த பல ஆண்டுகளாக ஒலித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் பொதுமக்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். #அரசேஆலயத்தைவிட்டுவெளியேறு என்று ஹாஸ்டேக் செய்து பல செய்திகள் கடந்த சில வருடங்களாக வந்துள்ளது.

இந்த நிலையில் 2020-2021 வருடத்திற்க்கான தமிழக பட்ஜெட் நேற்று தமிழக அரசு வெளியிட்டது. இதில் முஸ்லிம்களின் மசூதிகளின் பராமரிப்பிற்க்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ. 60 லட்சத்திலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தப்படும் என்றும் கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இந்துக்களின் கோவில்களை எல்லாம் அறநிலையத்துறை எடுத்துக் கொண்டு கோவில்களில் வரும் வருமானத்தை அனைத்தையும் அப்படியே எடுத்துக் கொள்கிறது. இந்த பணம் அனைத்தும் இந்து கோவில்களை பாரமரிப்பதற்க்காக மட்டுமே இந்துக்கள் அனைவரும் உண்டியலில் போடும் பணமாகும். இந்த பணம் முழுவதையும் இந்துக்களுக்குப் பயன்படுத்தாமல், மற்ற மதத்தினருக்கு பயன்படுத்துவது போன்ற கொடிய அக்கிரமம் இந்த உலகிலேயே எங்கும் பார்க்க இயலாது ஒன்றாகும். இந்த அநீதி உடனே களையப்பட வேண்டும். இந்துக்களின் கோவில்கள் எத்தனையோ உரிய பராமரிப்பின்றியும் ஒரு வேளை பூசைக்கு வழியின்றியும், அர்ச்சகர்களுக்கு பல மாதம் வருமானம் கொடுக்காமலும் இன்னும் எத்தனை எத்தனை இழிவு உண்டோ, அத்தனையும் நடந்த கொண்டிருக்கும் போது இப்படிப்பட்ட செய்தி இந்துக்களின் கோபத்தைப் பல மடங்காகத் தூண்டியுள்ளது.

இந்துக்களின் பணம் மறைமுகமாக மதமாற்றத்திற்க்குப் பயன்படுகிறது. இந்துக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் போது, வறுமையைக் காட்டி மதமாற்றம் நடைபெறுகிறது. இந்துக்களின் பணம் இந்துக்களிடமே இருந்தால் வறுமை ஒழியும். கோவில்கள் நன்றாக பராமரிக்கப்படும் என்று இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி பல மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

சிறுபான்மையினரைக் கவர்ந்து அவர்களை ஓட்டுக்களை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் இந்த போக்கு எத்தகைய அராஜகத்தையும் அரங்கேற்ற வைக்கிறது. என்று ஓயும் இந்த அரசியல் வேட்டை ? என்று ஓயும் இந்த அநியாயம் ? என்று மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

நியாயமாகப் பார்த்தால் இந்துக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டு போராட்டம் நடத்த வேண்டும். ஆனால் இங்கு வேறு எதற்க்கோ போராட்டம் நடைபெறுகிறது என்று மிகுந்த வருத்தத்துடன் கூறுகின்றனர். இந்த அநியாயம் களையப்பட வேண்டும் என்று பலர் இறைவனிடம் முறையிட்டு பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.

அவசர உதவிக்கு காவலன் ஆப் நிறுவிவிட்டீர்களா?

அவசர உதவிக்கு காவலன் ஆப் நிறுவிவிட்டீர்களா?

SOS என்பது அவசரம் அல்லது ஆபத்தான நிலையை உணர்த்தும் சமிக்ஞை குறியீடாகும். தந்தி டெலிகிராம் காலத்திலே, மோர்ஸ் கோட் Morse Code செய்தி பரிமாற்றத்திற்க்கு பயன்படுத்தப்பட்டது. அதில் மூன்று புள்ளி S என்ற எழுத்தைக் குறிக்கும். மூன்று கோடுகள் O என்ற எழுத்தைக் குறிக்கும். அவ்விதமாக, அவரச உதவிக்கு SOSOSOSOS என்று அடித்துவிட்டு பதிலுக்காக காத்திருப்பர். அதுவே காலப் போக்கில் SOS என்றால், அவரச நிலை சமிக்ஞை செய்வதாக அமைந்துள்ளது.

தற்போது இந்த SOS வசதி அனைத்து கைபேசிகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் மிகவும் அவசர நிலையில் காவலர்களின் (போலீஸ்) உதவி தேவைப்பட்டால், நம் கைபேசியில் உள்ள இந்த SOS பதிக்கப்பட்ட பட்டனைத் தட்டினால், அது உடனே, பதிவு செய்யப்பட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பிவிடும். மிகவும் விரைந்து வந்து காவலர்கள் நம் உதவிக்கு வருவார்கள். ஆகவே, இது அனைவருக்கும் ஆபத்துக் காலங்களில் மிகவும் அத்தியாவசிய தேவையாக இருந்தாலும், பெண்களுக்கும் பெரியோகளுக்கும் இது மிகவும் அவசியம். இது கைபேசியில் நிறுவக்கூடிய ஆப் செயலியாக உள்ளது. கூகுல் ப்ளே ஸ்டோரில் சென்று Kavalan காவலன் என்ற இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொண்டால், நமக்கு இது கண்டிப்பாக ஆபத்துக் காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.

எப்படி பயன்படுத்த வேண்டும் ?

ஆபத்து மற்றும் அவசர நிலை காலங்களில், உங்கள் கைபேசியில் SOS என்று பொறிக்கப்பட்ட பட்டனைத் தட்டினால், 5 விநாடிகள் எண்ணும். எண்ணிக்கை முடிந்த பின்னர், உங்கள் இருப்பிடம் மற்றும் உங்கள் கைபேசி காமிராவில் படம் பிடித்து காவலன் குழுவிற்று அனுப்பி விடும். இந்த செய்தியைப் பெற்ற காவலன் குழுவினர் உடனடியாக ஓரிரு நிமிடங்களில் உங்கள் இடத்திற்க்கு விரைந்து வந்துவிடுவார்கள்.

தனியாகச் செல்லும் பெண்கள், முதியவர்கள், இரவில் பயணம் செய்பவர்கள் போன்ற பலருக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இது வரை பத்து லட்சத்திற்க்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவியுள்ளனர்.

மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? வழிபடுவது எப்படி?

மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? வழிபடுவது எப்படி?

கோவில்களில் வழிபாடு எப்படி நடக்கும் ?

மகா சிவராத்திரி இரவை நான்கு காலமாக பிரித்து ஒவ்வொரு காலமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஒவ்வொரு காலமும் எந்த திருவுருவத்திற்க்கு எந்த அபிஷேக அலங்காரப் பொருட்கள் வைத்து வழிபட வேண்டும் என்ற தகவல்கள் இங்கே பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?

சிவராத்திரி முதல் நாளன்று விரதத்தைத் துவக்க வேண்டும். அன்று முழுவதும் ஒரு வேளை உணவு உண்ணலாம். அன்று முழுவதும் சுகபோகங்களைத் தவிர்த்தும், சினிமா/டிவி பார்ப்ப்தைத் தவிர்த்தும் நம் சிந்தனையில் சிவத்தை நிறுத்தி சிவனோடு ஒன்றியும் சிவ மந்திரங்கள், தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறைகளை ஓதியும் வழிபாடு செய்ய வேண்டும். விரதம் மேற்கொள்ளும் போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். சில கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருக்கிறார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும் போது தான் எளிதாக வசப்படும். நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காகத் தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனத்தை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூசைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

மகா சிவராத்திரி அன்று நாம் எவ்வாறு வழிபடலாம் ?

சில காலம் முன்பு, சிவராத்திரி அன்று, இரவு முழுவதும் கண் விழித்திருக்க வேண்டும் என்பதற்க்காக வீடுகளிலும் பொது இடங்களிலும் டிவிக்களில் சினிமா பார்ப்பதும், தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளும் அரங்கேறின. இறைவனை சிந்தையில் நினையாது செய்யும் எந்த ஒரு காரியத்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. விரதம் இருப்பதே, நாம் தினமும் வழக்கமாக செய்யும் செயல்களைத் தவிர்த்து, உணவின்மையால் உடல் சிறிது தளர்ந்து, அந்தத் தளர்வின் காரணமாக, மனது அங்கும் இங்கும் எங்கும் அலையாமல், ஓரிடத்தே நிலை நிறுத்தப்பெறும் நிலையை எய்துவதால், அம் மனத்தை சிவபெருமானிடத்து சமர்ப்பித்து, அவனோடு இரண்டரக் கலந்து நிற்பதேயாகும்.

ஆகவே, மகா சிவராத்திரி அன்று காலை தொடங்கி, மறுநாள் காலை வரை விரதம் இருந்தும், திருக்கோவில்களிலும், இல்லங்களிலும் வழிபாடு செய்தும், திருமுறைகள் மற்றும் குறிப்பாக திருக்கேதீச்சரப் பதிகங்கள், திருவண்ணாமலைப் பதிகங்கள் ஆகியவற்றைக் கோவில்களிலும் இல்லங்களிலும் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். இயன்ற வரை, உங்களுக்கு அருகில் உள்ள கோவில்களிலோ, சிவாலயங்களிலோ சென்று அங்கே சிந்தையை இறைவனிடத்தில் செலுத்தி வழிபாடு செய்யுங்கள். சிவராத்திரி அன்று சிவாலய தரிசனம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

சிவராத்திரி வழிபாட்டின் பலன்கள் யாது ?

சிவராத்திரி வழிபாட்டின் காரணமாக, உங்களுக்குத் தற்போது இருக்கும் கவலைகளும், வர இருக்கும் கவலைகளும் வலுவிழந்து நீங்கும். நீங்கள் முன்னெடுத்த காரியங்கள் வெற்றி பெறும். சிவாயநம என்று நம் சிந்தனையில் நிலைத்திருந்தால், வேறு அபாயம் நம்மை ஒரு போதும் நெருங்காது. எண்ணும் இடங்கள் எல்லாம் செல்லத்துடிக்கும் மனமானது மிகவும் இலகுவாக நம் கட்டுக்குள் வரும். இதனால், துன்பம் தரும் செயல்களில் வீழ்ந்திடாது, நன்மை தரும் செயல்களில் மட்டுமே நிலைத்திருந்து நமக்கு நன்மையே வந்து சேரும். இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களை வலுவிழக்கச் செய்து, நமக்கு நன்மையே அருளி, நம் தீவினைகளையும் சுட்டெரித்து, நமக்கு முக்தியும் தந்தருள்வார் சிவபெருமான்.

கோவிட்-19 கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கு பெயர் அறிவிப்பு

கோவிட்-19 கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கு பெயர் அறிவிப்பு

சீனாவில் உருவாகி, தற்போது உலகம் எங்கும் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கு கோவிட்-19 எனப் பெயரிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவின் ஊகான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது மேலும் இந்த கிருமி பரவாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோய் பரவாமலிருக்க ரோபோக்கள் உதவியும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வருகிறது சீனா.

கொரோனா பீதி தற்போது சிங்கப்பூரையும் விட்டுவைக்க வில்லை. ஒரு குறிப்பிட்ட வங்கி ஊழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதால் முன்னூறுக்கும் மேற்பட்ட தனது ஊழியர்களை அந்த வங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

தற்போதைய நிலவரப்படி 20 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 44 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் நோய்க்கு அதிகாரப்பூர்வ பெயர் வைத்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கொரோனா வைரஸ் நோய் ஆகிய வார்த்தைகளின் சொற்களை இணைத்து கோவிட்-19 என்று அதிகாரப்பூர்வமாக இந்த பெயரை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 19 என்பது ஆண்டு 2019 ஐக் குறிப்பதாக உள்ளது.

இந்த வைரஸ் மேலும் பரவாமலும், இதற்கு உரிய மருந்தை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் அனைத்து மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.