டெல்லி, தெலங்கானா ஆகிய இடங்களில் புதிய கொரனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது

டெல்லி, தெலங்கானா ஆகிய இடங்களில் புதிய கொரனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் கொரனா வைரஸ் பாதிப்பிற்க்கும் பலியானோர் எண்ணிக்கை 3000 ஐக் கடந்துள்ள நிலையில், இந்தியாவில் புதியதாக இருவருக்கு கொரனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது வரை மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தலா 3 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இத்தாலி நாட்டிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாய் நாட்டிலிருந்து தெலங்கானா வந்து மற்றும் ஒருவருக்கும் கொரனா வைரஸ் தாக்குதல் இருப்பதை உறுதி செய்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம்.

இரண்டு பேரும் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் அவர்களது வெளிநாட்டு பயணம் பற்றிய செய்திகளும் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தது.

ஜப்பான் நாட்டின் அருகே கொரனா வைரஸால் தாக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் முதன் முதலில் இந்த வைரஸ் பரவிய சீனாவின் ஊகான் மாநிலத்தில் இருந்தும் 76 இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

உலகம் முழுவதிலும் 70 க்கும் அதிகமான நாடுகளில் 88,000 பேருக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்னர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதால், மக்கள் தொகை அதிகமான நம் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கை முழு வீச்சில் அமையப் பெறுவது மிகவும் முக்கியமானதாகும். மேலும் ஒவ்வொருவரும் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து அந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது மிக அவசியமாகும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் டிஸ்கவரி சானலின் இன் டு தி வைல்ட் நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு. டீசர் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் டிஸ்கவரி சானலின் இன் டு தி வைல்ட் நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு. டீசர் வெளியீடு

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சனவரி மாதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் டிஸ்கவரி சானலின் நிகழ்ச்சி ஒன்று படிப்பிடிப்பிற்க்காக திரு ரஜினிகாந்த் அவர்கள் தமிழ்நாடு கர்நாடகா எல்லைப்பகுதியில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதிக்கு சென்று, அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற செய்தி வெளிவந்தது.

இந்த நிலையில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், டிஸ்கவரி சானலின் “இன் டு தி வைல்ட்” (Into the Wild) என்ற நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி மாலை 8 மணிக்கு டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பாகும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இதில் திரு ரஜினிகாந்த் அவர்கள் பியர் கிரில்ஸ் அவர்களோடு இணைந்து நடித்துள்ளார்கள்.

#ThalaivaOnDiscovery

https://twitter.com/DiscoveryIN/status/1232870470032117760

2020 இல் வர இருக்கும் புதிய படங்களின் அணிவகுப்பு

2020 இல் வர இருக்கும் புதிய பட அணிவகுப்பு

கலகலக்கும் 2020 சினிமாக் களம். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த வருடம் வர இருக்கும் நட்சத்திரங்களின் படங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய வெற்றிப்படங்களுக்குப் பின்னர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. படத்திற்க்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் விரைவில் நம் திரைக்கு வர இருக்கிறது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். தனுஷ் ஜோடியாக மலையாள ராஜிஷா விஜயன் நடிக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

டாக்டர் வேடத்திற்க்கு புதிய புத்துணர்வு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்க பல பிரபலங்கள் இதில் நடிக்கிறார்கள். ஆக்ஷன், காமெடி, திரில்லர் என அனைத்து அம்சங்களுடன் திரைக்கு வர இருக்கிறது என்கிறார் இயக்குநர்.

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யாவின் 2D எண்டர்டைன்மெண்ட் இந்த படத்தைத் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது நடிகர் சூரியாவின் 38 ஆவது படமாகும். இந்த படத்தில் கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை மையப்படுத்தி படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமும் இந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெரும் என்று பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் அரசியல் கதையை மையமாகக் கொண்டு பல திரில்லர் காட்சிளோடு வரவிருக்கும் படம் மாநாடு. இந்த ஆண்டு இந்தப் படம் திரைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பிகில் படத்திற்க்கு அடுத்ததாக விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு அன்று இந்த படம் திரைக்கு வர வாய்ப்பிருக்கிறது.

வெல்வட் நகரம், இடம் பொருள் ஏவல், லாக்கப், அசுரகுரு, ஜிப்சி, சண்டக்காரி, கபடதாரி, பென்குயின், மழையில் நனைகிறேன், அடங்காதே, நிசப்தம், இந்தியன் 2, தமிழரசன், கன்னிராசி, பூமி, அக்னி சிறகுகள், கடைசி விவசாயி, கோப்ரா, FIR, மிருகா, துப்பறிவாளன் 2, 4G, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பல புதிய திரைப்படங்கள் நம் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. சினிமா நம் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் நல்ல பொழுதுபோக்கை அளிக்கக் காத்திருக்கிறது.

உங்கள் வீடு மனை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா? அப்ப இதை செய்யுங்க.

உங்கள் வீடு மனை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா? அப்ப இதைச் செய்யுங்க.

ஆவணங்கள் அனைத்தும் திரட்டிக் கொள்ளுங்கள்.

முதலாவதாக, உங்கள் வீடு அல்லது மனைக்குரிய அனைத்து உரிய ஆவணங்களும் முறையாக இருக்கிறதா என்று சரிபாருங்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில், அந்தந்த ஆவணங்களை உரிய அலுவலகங்களில் சென்று பெற்றுக் கொள்ளுங்கள். விற்பனைப் பத்திரங்கள் (Sale Deed), மூலப் பத்திரங்கள்(Parent deeds), பட்டா, சிட்டா, வரி கட்டிய ரசீதுகள், வில்லங்கச் சான்றிதழ், தடையின்மை (NOC) சான்றிதழ் ஆகியவற்றைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றின் நகல்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.

தூய்மையாகவும் புதிய பொலிவோடும் திகழ வேண்டும்.

நீங்கள் விற்கப்போகும் வீடு அல்லது மனை ஆகியவற்றை மிகவும் தூய்மையாகவும், பார்வைக்கு அழகாகவும் வைத்துக் கொள்ளுங்கள். வாங்க வருபவர்களை முதல் பார்வையிலேயே கவர வைத்து அவர்களுக்கு பிடிக்க வைப்பதற்க்கு இது மிகவும் முக்கியமானதாகும். தேவையில்லாத கழிவுகள், குப்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துங்கள். சாக்கடை, நீர் ஒழுகுதல் போன்றவற்றை சீர் செய்து தூய்மையாக வைத்திருங்கள். முடிந்தால், ஒரு முறை பெயிண்ட் அடிக்கலாம். இது வீட்டை புதுமையானதான ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். காலி மனைகளில், மரங்கள் முட்கள் புதர்கள் ஆகியவற்றை நன்றாக சத்தம் செய்ய வேண்டும். மொத்தத்தில் உங்கள் வீடு அல்லது மனையைப் பார்க்கும் போது புதுமையான தோற்றத்துடனும், சுற்றுப்புறமும் தூய்மையான தோற்றத்தைக் கொடுக்க வேண்டும்.

தகவல் சொல்லுங்கள்

அதாவது விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம் என்றால், பலருக்குத் தெரிய வேண்டும். உங்கள் வீடு மனை விற்பனைக்கு இருப்பதைப் பற்றித் தெரிந்தால் தானே அவர்கள் உங்களை அணுக முடியும். ஆகவே, நண்பர்கள் வட்டம், உறவினர்கள் வட்டம், உங்கள் தெரு கூட்டமைப்பு, உங்கள் நகரின் செய்தித்தாள் ஆகியவற்றில் விளம்பரமும் செய்யலாம். வலைதள நட்புக்களிடமும் உங்கள் வீடு மனை பற்றி தெரியப்படுத்தலாம். உங்கள் வீடு மனையின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் தெருவில் வசிப்பவர்களுக்கும் தெரியப் படுத்துங்கள். உங்கள் தேவைக்கேற்ப, பெரிய செய்தித் தாள்களிலும் விளம்பரம் செய்யலாம். www.99acres.com, www.magicbricks.com www.nobroker.in www.housing.com போன்ற வலைதளங்களிலும் உங்கள் வீடு மனை பற்றிய தகவல்களை விளம்பரம் செய்யுங்கள்.

விளம்பர குறிப்பு

விளம்பரம் செய்யும் போது, உங்கள் வீடு மனை பற்றிய தகவல்களை மிகவும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அருகில் இருக்கும் வசதிகளையும் தெரிவிக்க வேண்டும். ரயில் நிலையத்திலிருந்து, விமான நிலையத்திலிருந்து, நகரின் மிக முக்கிய இடங்களிலிருந்து எவ்வளவு தூரம், பேரூந்து நிலையத்திலிருந்து எவ்வளவு தூரம், மருத்துவமனை எவ்வளவு தூரம், பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது ஆகிய தகவல்களில் வாங்குபவருக்குப் பிடித்தமானதாகவும், வாங்குவதற்க்கு ஆதரவாகவும் இருக்கும் தகவல்களைப் பகிரலாம்.

தரகர் ஆலோசனை

உங்களுக்குத் தெரிந்த தரகர்களிடமும் உங்கள் வீடு மனை பற்றித் தெரிவிக்கலாம். உங்கள் வட்டாரம், ஊர், தலைநகர் ஆகியவற்றில் இருக்கும் நம்பகத்தகுந்த தரகர்களிடமும் தெரிவிக்கலாம். அனுபவம் வாய்ந்த தரகர்கள் உங்கள் பகுதியைப் பற்றியும், உங்கள் பகுதியின் லாப நட்டங்களை நன்கு அறிந்து வைத்திருப்பர். உங்கள் வீடு மனை நல்ல விலைக்கு விற்க நல்ல ஆலோசனைகளும் தரலாம்.

விலை நிர்ணயம்

வாங்குபவர்கள் உங்களை அழைக்கத் துவங்கும் முன்னர், உங்கள் வீடு மனையின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வட்டாரத்தில் பொதுவாக என்ன விலைக்குப் போகிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த விலையை ஒட்டியே இருப்பது நல்லது. உங்கள் வீடு மனைகளின் பல்வேறு சிறப்புக்களாலும் வசதிகளாலும் இந்த விலை மாறும். வாங்குபவர்கள் விலை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினால்(பேரம் பேசினால்), உங்களால், எவ்வளவு வரை குறைக்க முடியும் என்பதையும் முதலிலேயே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்கள் விலையில் சற்று ஏற்றம் இறக்கம் செய்ய இடம் கொடுத்து தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

வாங்குபவர்களை புன்னகையோடு கையாளுங்கள்.

நீங்கள் விளம்பரம் செய்துவிட்டாலோ, மற்றவர்களிடம் சொல்லிவிட்டாலோ, உங்கள் வீடு மனைகளைப் பார்வையிட வருவார்கள். உங்கள் கைபேசி ஒலிக்கத் துவங்கும். ஒரு அழைப்பைக் கூட விட்டு விடாமல், அவர்கள் கேட்கும் தகவல்களை அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிரமம் ஏதும் கொடுக்கமால், உங்கள் வீடு மனை இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களையும், அங்கு எப்படி வருவது என்ற தகவலையும் கொடுக்க வேண்டும். கூகுள் கொகேஷனும் பகிரலாம். அவர்களை புன்னகையுடன் வரவேற்று, சுற்றிக் காட்டுங்கள். நல்ல வசதிகளை மேற்கோள் காட்டி எடுத்துக் கூறுங்கள். அவர்கள் கேட்கும் வினாக்கள் அனைத்திற்க்கும் எந்த ஒளிவு மறைவு இன்றி பதில் அளியுங்கள்.

உங்கள் வீடு மனை நல்ல விலைக்கு விற்பனையாக வாழ்த்துக்கள்.

28ஆ 29ஆ? லீப் இயர் ஏன் வருகிறது?

28ஆ 29ஆ? லீப் இயர் ஏன் வருகிறது?

நடக்கும் வருடத்தை நான்கால் வகுத்து மீதி பூஜ்யம் வந்தால் லீப் இயர் என்று நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதாவது நான்கு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்திற்க்கு 29 நாட்கள். மற்ற ஆண்டுகளில் 28 நாட்கள். ஏன் இந்த கணக்கிடும் முறை வந்தது ?

நாம் இன்னும் இன்றும் பயன்படுத்தி வரும் நாட்காட்டி முறையானது பழங்கால கிரேக்க (கத்தோலிக்க கிருகோரியன்) நாட்காட்டி முறையாகும். இதன் முறைப்படி தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதம் 29 நாட்கள் வருகிறது.

பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது. மேலும் சுரியனையும் சுற்றி வருகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் 24 மணி நேரம் ஆகும். இந்த ஒரு நாள் நேரத்தை அளவீட்டுக் கருவியாக வைத்து, பூமி சூரியனைச் சுற்றி வரும் நேரத்தை அளவிட்டால், 365.25 நாட்களாகிறது. அதாவது, பூமி தன்னைத் தானே 365.25 முறை சுற்றிக் கொண்டிருக்கும் போது, சூரியனைச் சுற்றி வரும் சுற்றில் ஒரு சுற்று நிறைவடைகிறது.

இதனால், நாம் பூமி தன்னைத் தானே சுற்றும் நேரத்தை அளவு கோலாகக் கொண்டு சூரியனைச் சுற்றும் நேரத்தைக் கணக்கிடும் போது, ஒவ்வொரு வருடமும் .25 நாட்கள் குறைத்து கணக்கிடுகிறோம். இந்த .25 நாட்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் போது ஒரு நாளாக கருதி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதை ஈடு கட்ட ஒரு நாளாக கணக்கிட்டுக் கொள்கிறோம். பிப்ரவரியில் ஏற்கனவே குறைவான நாட்களாக 28 நாட்களே உள்ள நிலையில், இந்த பிப்ரவரியில் இதை 29 ஆவது நாளாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணைத்து கணக்கிடப்படுகிறது.

பூமி தன்னைத் தானே சுற்றி வரும் நேரத்தின் கால அளவு வேறு. பூமி சூரியனைச் சுற்றி வரும் கால அளவு வேறு. பூமி தன்னைத் தானே சுற்றும் கால அளவு ஒரு நாள், அதாவது 24 மணி நேரம். இந்த அளவை வைத்து நாம் பூமி சூரியனைச் சுற்றி வரும் நேரத்தை அளவிடுவதால் கணக்கு இவ்வாறு வருகிறது.

நம் பாரத நாட்டின் பண்டைய கால அளவும், கணக்கீட்டு முறையும் இது போன்று அல்ல. பூமி தன்னைத் தானே சுற்றி வரும் நாள் கணக்கையும், சந்திரன் பூமியைச் சுற்றி வரும் கால அளவையும் அளவீடாகக் கொண்டு மாதங்கள் கணக்கிடப் படுவதால், இந்த சரிக்கட்டும் கணக்கு தேவையில்லாத ஒன்றாகிறது.