பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் – முதல்வருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நேரில் நன்றி தெரிவித்தார்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் – முதல்வருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நேரில் நன்றி தெரிவித்தார்

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தமைக்கு நன்றி சொல்லி பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக சட்டப்பேரவையில் அறிவித்தார் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களும், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் இந்த பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன.

இதனால், இந்த பாதுகாப்பு மண்டல பகுதியில் இருந்து ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயுக்கான ஆய்வுப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இரும்புத்தாது ஆலை, துத்தநாக உருக்கு ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

தோல் மற்றும் விலங்குகள் உடல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆகியன தொடங்க அனுமதி கிடையாது. இது விவசாய நிலங்களைப் பாதுகாத்து உணவு உற்பத்திக்கும், தண்ணீர், நிலம் ஆகிய செழிப்பிற்க்கும் வழி வகுக்கும் என்பதால், இந்த அறிவிப்பு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்பிற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் மதிப்பிற்க்குரிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த தகவலை மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

யார் இந்த பிரஷாந்த் கிஷோர்? 2021 சட்டப்பேரவை தேர்தல் திமுகவின் அரசியல் ஆலோசகராக நியமனம்.

யார் இந்த பிரஷாந்த் கிஷோர்? 2021 சட்டப்பேரவை தேர்தல் திமுகவின் அரசியல் ஆலோசகராக நியமனம்.

அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படுபவர் பிரசாந்த் கிஷோர். யார் இவர் ? இவரின் சாதனைகள் என்ன என்று பார்ப்போம்.

பீகார் மாநிலத்தில் உள்ள கோனார் என்ற கிராமத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்தார் பிரஷாந்த் கிஷோர். பள்ளிப் படிப்பையும் பொறியியல் பட்டப் படிப்பையும் முடித்த பிரஷாந்த், குஜராத்தில் முறையான அலுவலகம் ஏதும் இல்லாமல் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா பார்ட்டிக்கு வேலை செய்தார். தன்னுடைய நுட்பமான திறமையினால், மிக விரைவில் அந்த கட்சிக்கு அரசியல் ஆலோசகராக மாறினார். ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தலில் வெற்றி பெறுவது முதல் நல்ல ஆட்சி செய்வது வரை பல்வேறு ஆலோசனைகளையும் வியூகங்களையும் அமைத்துக் கொடுக்கும் வேலையில் மிகத் திறமையானவராக வலம் வந்தார்.

அவருடைய முதல் பெரிய வெற்றியாக அமைந்தது, 2011 ஆம் ஆண்டு திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக குஜராத் முதலமைச்சராக தேர்வு செய்வதற்கான பணிகளின் முக்கிய பங்களிப்பாகும். இதனால் 2012 ஆம் ஆண்டு திரு மோடி அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார்.

அதன் பின்னர் அவர் தனியாக சிஏஜி CAG (Citizens for Accountable Governance) என்ற நிறுவனத்தை நிறுவி, புதிய தேர்தல் பரப்புரை உத்திகளையும் வியூகங்களையும் கையாண்டு, 2014 ஆம் ஆண்டு திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்க உறுதுணையாக செயல் பட்டார். திரு மோடி அவர்களின் தேர்தல் பரப்புரைக் குழுவில் மிகவும் முக்கியமான ஆலோசகராக இருந்ததாக “நரேந்திர மோடி: தி மேன், தி டைம்ஸ்” என்ற நூலை எழுதிய நிலஞ்சன் முகாபத்யாயே குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் திரு மோடி அவர்களின் குழுவிலிருந்து விலகி, சிஏஜி யை, ஐ-பேக் I-PAC (Indian Political Action Committee) இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு என்ற அமைப்பாக உருமாற்றம் செய்தார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், பீகார் ஜனதாதள கட்சி நித்திஸ்குமார் அவர்களுக்கு ஆலோசனைகளும் வியூகங்களும் அமைத்துக் கொடுத்து அவர் மூன்றாவது முறையாக ஆட்சி பீடத்தில் அமர பங்களித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், நித்திஸ்குமார் பிரசாந்த் கிஷோரை தனது ஆலோசகராக நியமித்தார்.

பின்னர் இரண்டு முறை தொடர்ந்து தோல்வி அடைந்த பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங் அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைத்துக் கொடுத்தார். இந்த பங்களிப்பை பல காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டினார்கள்.

பின்னர் 2017 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தின் ஜகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டு தேர்தலில் மிகப் பெரிய வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தார்.

அரசியல் ஆலோசகராக, ஆம் ஆத்மி கட்சிக்கு 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் பங்கு கொண்டு 70 இடங்களில் 62 இடங்கள் வெற்றி பெற்று மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்டார்.

நித்திஸ்குமார் அவர்களின் குடியுரிமை சட்டத்திற்க்கான நிலையைப் பற்றி கருத்து தெரிவித்ததற்க்காக, சனவரி 29, 2020 அன்று, அவர் தனது கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோரை நீக்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில் தான் பிப்ரவரி 3, 2020 அன்று, வரக்கூடிய 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு அரசியல் ஆலோசகராக ஐ-பேக் பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம், பிரசாந்த் கிஷோர் அவர்களின் ஆலோசனையில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கலவரக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஹ. ராஜா

கலவரக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – திரு H ராஜா

சிஏஏ குடியுரிமைத் திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் எவருக்கும் ஒரு பாதிப்பும் இல்லை. இது வெளிநாட்டிலிருந்து தஞ்சம் புக வருபவர்களைப் பற்றியது தான் என்று மத்திய அரசு எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு மக்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்து வருகிறது.

ஆனால் சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் செய்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் தவறான தகவல்களைப் பரப்பி அவர்களை போராட்டம் செய்யவும் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை இஸ்லாமியர்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தினார்கள். இதனிடையே போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதைத் தவிர்க்க போலீசார் தடியடி நடத்தினர். பலர் மீது வழக்குப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையில் போராட்ட கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு காவல்துறை அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செயல் காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் மாநிலம் முழுவதும் உள்ள கலவரக்காரர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்றும் திரு H ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் 1947 இல் தேசப்பிரிவினைக்கு முன் இருந்த கலவரத்தைப் போல ஒரு சூழ்நிலையைக் கொண்டு வர சதி துவங்கிவிட்டது. இன்னொரு பிரிவினையை அனுமதிக்கக்கூடாது. இந்துக்களே உஷார் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்தியா வளர்ச்சி அடைய வரி கட்டுங்கள்: பிரதமர் மோடி

இந்தியா வளர்ச்சி அடைய வரி கட்டுங்கள்: பிரதமர் மோடி

இந்தியா 5 (௫) ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடைவது என்பதில் சவால்கள் இருந்தாலும், அது அடைய முடியாத இலக்கு அல்ல என்று தெரிவித்தார். 3 (௩) ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்க்கு 70 (௭௰)ஆண்டுகள் ஆனது. ஆனால், இதில் யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்று தெரிவித்தார். கடினமான இலக்குகளை நாம் நிர்ணயித்து அதனை நோக்கி கடின உழைப்பைக் கொடுத்து நாம் முன்னேறுவது, இலக்கேயில்லாமல் செல்வதை விட மிக சிறந்ததாகும் என்று டைம்ஸ் நௌ மாநாட்டில் உரையாற்றினார்.

முந்தைய அரசுகள் வரி அமைப்புகளில் எந்த வித மாற்றங்கள் கொண்டு வருவதற்க்கும் மிகவும் அஞ்சின. ஆனால் பாரதிய ஜனதா அரசு மக்களின் அரசாக பல வித மாற்றங்களைத் தைரியமாக செய்து வருகிறது. மக்கள் அனைவரும் அரசுக்குச் சேர வேண்டிய வரிகளை மிகச் சரியாக கட்டுமாறு கேட்டுக் கொண்டார். தற்போதைய நிதித் திட்டத்தில் (budget) இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் வளர்ச்சியை எட்ட வேண்டிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நூற்றாண்டு வரலாற்றில் பதியக்கூடிய மிக முக்கியமான முடிவுகளைத் தமது அரசு எடுத்துள்ளது என்று அதனைப் பட்டியலிட்டார். தில்லியில் முறையற்ற காலனிகளை முறைப்படுத்துதல், காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370 விலக்கியது, முத்தலாக் முறையை ஒழித்தது, கார்ப்பரேட் வரிகளைக் குறைத்தது, இராமர் கோவில் கட்ட அறக்கட்டளை நிறுவியது, குடியுரிமை சட்ட திருத்தம் என்று அடுக்கிப் பட்டியலிட்டார்.

இவையெல்லாம் மிக எளிமையான மாற்றங்கள் என்றும், இனி நல்ல துவக்கம் உள்ளது என்றும் தெரிவித்தார். சிறிய ஊர்களிலும் நகரங்களிலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த தமது அரசு முதன்முறையாகக் களம் இறங்கியிருக்கிறது என்றார் திரு மோடி. இந்தியா இனியும் கால நேரத்தை வீணடிக்காமல், தாமதிக்காமல், வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட்டு முன்னேறிச் செல்லும் நம்பிக்கை உள்ளது என்றார்.

அரசாங்கத்திற்க்கு முறையாக வரி செலுத்தாமல் மாற்று வழிகளை மக்கள் கண்டுபிடித்துக் கொண்டே உள்ளார்கள் என்றும் இதனால், முறையாக வரிகட்டுவோரின் சுமை அதிகரிக்கிறது என்றும் வருத்தம் தெரிவித்தார். இது வரை வந்துள்ள அனைத்து அரசுகளும் நம் வரி கட்டமைப்பைத் தொடுவதற்க்கு மிகவும் தயக்கம் காட்டின, ஆனால், தமது அரசு மிக தைரியமான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார். வரி ஏய்ப்பு இனி செய்ய முடியாத அளவு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றார்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் ஒன்றரை கோடி மக்களே வரி கட்டுகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் ஒன்றரை கோடி கார்கள் விற்பனையாகியுள்ளது. மூன்று கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலை விஷயமாக பயணித்துள்ளனர். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானமாக வெறும் 2200 பேர் தான் வரி தாக்கல் செய்துள்ளனர். இது நம்புவது போல இருக்கிறதா ? வரி ஏய்ப்பு செய்வதற்க்கு பலரும் பல வழிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

யாருடைய வரியை எந்த அதிகாரி மதிப்பீடு செய்கிறார் என்று தெரியாத வண்ணம் மதிப்பீடு செய்யும் முறையை நடைமுறைப் படுத்தியுள்ளோம். இனி நாட்டிற்க்குச் சேர வேண்டிய வரியினை தவறாமல் கட்டுவோம் என்று நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். வரியை யாரெல்லாம் செலுத்த வேண்டுமோ, அவர்கள் அனைவரும் நேர்மையாக அரசுக்குச் சேர வேண்டிய வரியை செலுத்த வேண்டும். அதை தமது கடமையாகவும், பெருமையாகவும் செய்ய வேண்டும்.

இந்த வரிப் பணம் வைத்து தான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. வரி செலுத்துவதன் அவசியத்தை ஊடகங்கள் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வரும் பத்தாண்டு ஸ்டார்ட்டப் எனப்படும் புதிய தொழிகளின் காலமாகும். வரும் பத்தாண்டுகளில் உலகின் சிறந்த தலைவர்களாக நம் நாட்டிலிருந்து தான் வருவார்கள். இந்த பத்தாண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும், தேவையான தண்ணீர் அனைவருக்கும் கிடைக்குமாறு அமையும். இந்த பத்தாண்டில் சிறு நகரங்களும் ஊர்களும் வளர்ச்சி காணும் ஆண்டுகளாக அமையும். இவையெல்லாம் நம் கிராமங்கள், இந்த பத்தாண்டும் நம் வளர்ச்சிக்கான ஆண்டு என்பது 130 கோடி மக்களின் கனவாக அமைந்துள்ளது என்று கூறினார்.