வரும் முன்னர் காப்பது எப்படி? கொரனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பது எப்படி?

வரும் முன்னர் காப்பது எப்படி? கொரனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பது எப்படி?

உலகம் முழுவதும் பரவிவிட்ட கொரனா வைரஸ், அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாகும். வெயில் அதிகமாக இருக்கும் இடங்களில் இது வேகமாக பரவாது என்று கருத்து சொல்லப்பட்டாலும் இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.

இருந்தாலும், வரும் முன்னர் காப்பதே அறிவுடையோர் செய்கையாகும். அவ்வகையில், கொரனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது, அதை பாதுகாப்பது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். முக்கியமாக, மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கொரனா வைரஸ் நோய் பாதிப்பு என்று சொல்லக்கூடிய COVID-19 கோவிட்-19 நோய்க்கு இன்றைய தேதி வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இந்த நோயிலிருந்து சிறந்த பாதுகாப்பு என்பது, இந்த நோய் நம்மிடம் தொற்றிக்கொள்ளாமல் இருப்பதே ஆகும். இந்த நோய் நம்மிடம் தொற்றிக் கொள்ளாமல் இருக்க சில வழிமுறைகளை கொரனா வைரஸ் தடுப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவற்றைக் காண்போம்.

சோப்பு போட்டு நன்றாக இரண்டு கைகளையும் 20 விநாடிகள் கழுவ வேண்டும்.

1. இந்த நோய் தொற்று இருப்பவர்களிடம் இருந்து விலகி இருங்கள். அவர்களை எவ்விதத்திலும் தொடாமல் இருங்கள்.

2. உங்களுடைய வாய், மூக்கு மற்றும் கண்களை, உங்கள் கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும்.

3. உங்களுக்கு நோய்க்கான அறிகுறி ஏதும் தென்பட்டால், வெளியே எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலேயே தங்கி இருங்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவமையை அணுகுங்கள்.

4. தும்மல், இருமல் வந்தால், அதை காகிதத்தாலோ, துணியினாலோ மறைத்து, அதைக் குப்பையில் எறிந்து விடவும். மீண்டும் மீண்டும் ஒரே துணி அல்லது காகிதத்தைப் பயன்படுத்தக் கூடாது.

5. உங்கள் வீடு, அலுவலகம் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். அடிக்கடி சுத்தம் செய்வதால், நோய் ஏற்படுத்தும் கிருமிகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.

6. நீங்கள் தொட்டு பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் கிருமிநாசிகளைத் தெளித்து சுத்தப் படுத்த வேண்டும்.

7. நோய் வராமல் இருக்க, முகத்திரை பயன்படுத்துவது அவ்வளவு பயனுள்ளதாக இருப்பதாக தெரியவில்லை. அதனால், அனைவரும் முகத்திரை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், நோய் இருப்பவர்கள் பிறருக்கு தொற்று ஏற்படுத்தாமல் இருக்க, கட்டாயமாக முகத்திரை பயன்படுத்த வேண்டும்.

8. உங்களுக்கு நோய்க்கான அறிகுறி தென்பட்டால் கட்டாயமாக முகத்திரை பயன்படுத்த வேண்டும்.

9. கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுவதே நோய் வராமல் தடுக்க மிகச் சிறந்த பாதுகாப்பு. இரண்டு கைகளையும் முதலில் சுத்தமான நீரில் நன்றாக அலசிக் கொண்டு, பின்னர் சோப்பு போட்டு, கைகளில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் மூலை முடுக்குகளிலும் நன்றாக சோப்பைத் தேய்த்து, குறைந்தது ஒரு 20 விநாடிகளாவது நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

10. கழிவறைக்குச் சென்று வந்த பின்னர், உணவு உண்பதற்க்கு முன்னர், இருமல், தும்மல் வந்து உங்கள் கைகளாலும் காகிதத்தாலும் மறைத்த பின்னரும், மூக்குச்சளி போன்றவற்றை சிந்திய பின்னரும் கண்டிப்பாக சோப்பு போட்டு இரண்டு கைகளையும் நன்றாகக் கழுவ வேண்டும்.

11. சோப்பு இல்லாத தருணத்தில், கைகளைச் சுத்தம் செய்யும் ஹேன்ட் சானிடைசர் Hand Sanitizer பயன்படுத்தி நன்றாக கழுவலாம். அந்த கை சானிடைசரில் குறைந்தது 60% ஆல்கஹால் இருக்க வேண்டும்.

12. அடிக்கடி கை கழுவிக் கொண்டும், உங்கள் இருப்பிடத்தைக் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தியும் வைத்திருக்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை அனைவரும் இப்போது இருந்தே பழக்கப்படுத்திக் கொண்டால், நோய் தொற்றுவதிலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியும்.

அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவரும் சுற்றுப்புறத்தையும் தங்கள் கைகளையும், மேலே குறிப்பிட்டுள்ளபடி சுத்தமாக வைத்துக் கொண்டால், எளிதாக நாம் இந்த நோய்த் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

அனைவரும் சுத்தம் பேணுவோம், நோய்த் தொற்றிலிருந்து நம்மைக் காப்போம்.