யார் இந்த பிரஷாந்த் கிஷோர்? 2021 சட்டப்பேரவை தேர்தல் திமுகவின் அரசியல் ஆலோசகராக நியமனம்.

யார் இந்த பிரஷாந்த் கிஷோர்? 2021 சட்டப்பேரவை தேர்தல் திமுகவின் அரசியல் ஆலோசகராக நியமனம்.

அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படுபவர் பிரசாந்த் கிஷோர். யார் இவர் ? இவரின் சாதனைகள் என்ன என்று பார்ப்போம்.

பீகார் மாநிலத்தில் உள்ள கோனார் என்ற கிராமத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்தார் பிரஷாந்த் கிஷோர். பள்ளிப் படிப்பையும் பொறியியல் பட்டப் படிப்பையும் முடித்த பிரஷாந்த், குஜராத்தில் முறையான அலுவலகம் ஏதும் இல்லாமல் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா பார்ட்டிக்கு வேலை செய்தார். தன்னுடைய நுட்பமான திறமையினால், மிக விரைவில் அந்த கட்சிக்கு அரசியல் ஆலோசகராக மாறினார். ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தலில் வெற்றி பெறுவது முதல் நல்ல ஆட்சி செய்வது வரை பல்வேறு ஆலோசனைகளையும் வியூகங்களையும் அமைத்துக் கொடுக்கும் வேலையில் மிகத் திறமையானவராக வலம் வந்தார்.

அவருடைய முதல் பெரிய வெற்றியாக அமைந்தது, 2011 ஆம் ஆண்டு திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக குஜராத் முதலமைச்சராக தேர்வு செய்வதற்கான பணிகளின் முக்கிய பங்களிப்பாகும். இதனால் 2012 ஆம் ஆண்டு திரு மோடி அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார்.

அதன் பின்னர் அவர் தனியாக சிஏஜி CAG (Citizens for Accountable Governance) என்ற நிறுவனத்தை நிறுவி, புதிய தேர்தல் பரப்புரை உத்திகளையும் வியூகங்களையும் கையாண்டு, 2014 ஆம் ஆண்டு திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்க உறுதுணையாக செயல் பட்டார். திரு மோடி அவர்களின் தேர்தல் பரப்புரைக் குழுவில் மிகவும் முக்கியமான ஆலோசகராக இருந்ததாக “நரேந்திர மோடி: தி மேன், தி டைம்ஸ்” என்ற நூலை எழுதிய நிலஞ்சன் முகாபத்யாயே குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் திரு மோடி அவர்களின் குழுவிலிருந்து விலகி, சிஏஜி யை, ஐ-பேக் I-PAC (Indian Political Action Committee) இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு என்ற அமைப்பாக உருமாற்றம் செய்தார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், பீகார் ஜனதாதள கட்சி நித்திஸ்குமார் அவர்களுக்கு ஆலோசனைகளும் வியூகங்களும் அமைத்துக் கொடுத்து அவர் மூன்றாவது முறையாக ஆட்சி பீடத்தில் அமர பங்களித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், நித்திஸ்குமார் பிரசாந்த் கிஷோரை தனது ஆலோசகராக நியமித்தார்.

பின்னர் இரண்டு முறை தொடர்ந்து தோல்வி அடைந்த பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங் அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைத்துக் கொடுத்தார். இந்த பங்களிப்பை பல காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டினார்கள்.

பின்னர் 2017 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தின் ஜகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டு தேர்தலில் மிகப் பெரிய வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தார்.

அரசியல் ஆலோசகராக, ஆம் ஆத்மி கட்சிக்கு 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் பங்கு கொண்டு 70 இடங்களில் 62 இடங்கள் வெற்றி பெற்று மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்டார்.

நித்திஸ்குமார் அவர்களின் குடியுரிமை சட்டத்திற்க்கான நிலையைப் பற்றி கருத்து தெரிவித்ததற்க்காக, சனவரி 29, 2020 அன்று, அவர் தனது கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோரை நீக்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில் தான் பிப்ரவரி 3, 2020 அன்று, வரக்கூடிய 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு அரசியல் ஆலோசகராக ஐ-பேக் பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம், பிரசாந்த் கிஷோர் அவர்களின் ஆலோசனையில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.