ரோடு பெருசாத்தான் இருக்கு. ஆனால் போக முடியல. கார் நிறுத்தி வச்சிருக்காங்க. விபத்து வேற.

ரோடு பெருசாத்தான் இருக்கு. ஆனால் போக முடியல. கார் நிறுத்தி வச்சிருக்காங்க. விபத்து வேற.

பெரிய நகரங்களில் இன்று போக்குவரத்து மிகுந்த சவாலாக இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க்குச் செல்லும் நேரம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல வாகனங்கள் வீணாக எரிபொருளை எரித்து வீணாக்கி மாசுக்களை ஏற்படுத்தவோடு ஒவ்வொருவரையும் ரோட்டிலேயே அதிக நேரம் நிற்க வைத்து ஒவ்வொருவரின் உற்பத்தி அளவைக் கணிசமாகக் குறைத்துவிடுகிறது. இது நம் பொருளாதாரத்தில் மிகுந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சவாலான பல போக்குவரத்து பிரச்சனைகளையும் சமாளித்து நம் காவல்துறை மிகுந்த கவனத்துடன் சிறப்பான பணியாற்றி வருகிறது. ஆனால், காவல்துறை மட்டுமே அனைத்தையும் செய்ய இயலுமா ? வாகன ஓட்டிகளுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டாமா ?

இன்றைய போக்குவரத்து நெரிசல் காரணமாக இருக்க ஒரு முக்கிய காரணம், சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்தாமல், வாகனங்களை நிறுத்தி வைக்கும் வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதால் தான். சாலைகள் என்னமோ 100 அடி, 160 அடி, 80 அடி என்று அகலமாகத் தான் இருக்கும். ஆனால், சாலைகள் எத்தனை அடி அகலமாக இருந்தாலும், ஒரே ஒரு நான்கு சக்கர வாகனம் செல்ல மட்டும் இடம் கொடுத்துவிட்டு மற்ற இடங்களில் எல்லாம் தங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள். சிறு சிறு சாலைகளில் செய்தால் கூட பரவாயில்லை, பிரதான சாலைகளிலேயே மிகவும் குறுகிய இடத்தில் கூட கொஞ்சம் கூட கவலையில்லாமல் வைத்துக் கொள்கிறார்கள். நிமிடத்திற்க்கு 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் சாலையிலேயே தைரியமாக தங்கள் கார்களை நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள். லட்சம் பேர் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, என் கார் இங்கு நின்றால் போதும் என்ற சுயநல மனப்பான்மை எத்தகைய கீழ்த்தரமானது?

ஒரு சிலரின் சுயநல மனப்பான்மையும் அலட்சியமும் பலருக்குத் தொந்தரவாக இருப்பது நம் சமுதாயத்தில் தான். இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய், வாகனத்தில் இருந்தபடியே கடைக்காரர்களிடம் பொருட்களை வாங்குவதும், காசு கொடுப்பதுமான காட்சி மிகவும் வேதனைக்குரியது. சாலைகளில் நிறுத்தப்படும் கார்களை சிறிது தூரம் தள்ளி போக்குவரத்திற்க்கு இடைஞ்சலாக இல்லாமல் நிறுத்த முடியும். ஆனாலும் செய்ய மாட்டேன் என்கிறார்கள். கார்களை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்தால் என்ன ஆகிவிடும் ? உடலில் 10 கிலோ குறைந்து விடுமோ என்னவோ ?

இது பல விபத்துக்கள் நடப்பதற்க்கு முக்கிய காரணமாகவும் அமைகிறது. ஆனால், இதை யாரும் உன்னிப்பாக கவனித்துப் பொருட்படுத்துவதே இல்லை. இரண்டு வாகனங்கள் எதிர் எதிரே செல்லும் செல்லும் அளவு சாலையில் இடம் இருந்தும், ஒரு வாகனத்தை நிறுத்தி வைப்பதால், ஒரு வாகனம் மட்டுமே செல்ல இடம் இருக்கும். எதிர் எதிரே வரும் வாகனங்கள் யார் முதலில் இந்த இடத்தில் நுழைவது என்ற குழப்பத்தில் விபத்து நேர்ந்துவிடுகிறது. இவர்கள் இருவரும் குடுமிப்பிடி சண்டை போடுகிறார்கள். ஆனால், இந்த விபத்துக்கு மூல காரணமான, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் மறந்தே போய் விடுகிறார்கள்.

நிறைய ஆட்டோக்களும் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டோ, அல்லது சவாரி தேடி மெதுவாக சென்றோ சாலையின் உட்தடங்களை முடக்கி பல விபத்துக்கள் ஏற்பட காரணாக இருக்கிறது.

சென்ற ஆண்டு நந்தனம் அருகே நடைபெற்ற இந்த சாலை விபத்து காணொளியை கூர்ந்து கவனியுங்கள். காமிராவிற்க்கு முன்னால் இரண்டு வாகனங்கள், ஒன்று சரக்கு வேன் மற்றொன்று அவசர ஊர்தி போன்ற வாகனம், அவசரம் இல்லாத நிலையில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலை நான்கு தடங்கள் (Lanes) கொண்ட சாலையாக இருந்தாலும், இந்த இரண்டு வாகனமும் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு அந்த கடைசி தடங்கள் வாகன போக்குவரத்து செய்ய இயலாத படி முழுவதுமாக அந்த தடத்தை தடை செய்து விட்டது. அடுத்தது, பக்கத்து சாலையிலிருந்து பிரதான சாலைக்கு நுழையும் ஆட்டோவைக் கவனியுங்கள். வலதுபுறம் எத்தனை வேகமாக வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன? அது எதையுமே பொருட்படுத்தாது, அந்த ஆட்டோ ஓட்டுநர், இரண்டாவது தடத்தில் வேகமாக நுழைகிறார். பக்கத்து சிறிய சாலையிலிருந்து பிரதான சாலைக்குள் நுழைபவர்கள் நின்று, பின்னர் வலது புறம் பார்த்து, தாங்கள் நுழைவதால் எந்த வாகனத்திற்க்கும் தடங்கல் வராது என்பதை உறுதி செய்து கொண்டு நுழைய வேண்டும். ஆனால், இந்த ஆட்டோ ஓட்டுநர் எதையுமே சட்டை செய்யவில்லை. இந்நிலையில் அங்கே, இரண்டு இருசக்கர வாகனங்கள் விரைந்து வந்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இணையாக, அரசு பேரூந்தும் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. விரைந்து வந்து கொண்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ நுழைவதை சற்றும் எதிர்பாராமல், வலது புறம் செல்வதற்க்கு எத்தனிக்க, ஒரு வாகனத்தில் உள்ளவர் வெகு அருகில் வரக்கூடிய இரண்டு பேர் வரும் வாகனத்தின் மீது நிலை தடுமாறி விழ, அவர்களும் நிலைகுலைந்து அரசுப் பேரூந்து மீது விழுந்து இறந்தே விட்டார்கள்.

இது விபத்து என்று கருதப்பட்டு மூடப்பட்டுவிட்டது. இங்கு தப்பு செய்தவர்கள் யார் ? விபத்துக்கள் நடக்கும் இடங்கள் எல்லாம் கூர்ந்து கவனியுங்கள். சாலையை ஆக்கிமித்தும் வழி மறித்தும், சாலையின் உட்தடங்களை முழுமையாக மறித்தும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இதனால், ஏற்படும் வாகன நெறிசலை, அந்த வாகனத்தின் ஓட்டுநர் பக்கத்தில் நின்று டீ குடித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருப்பார். மேலே உள்ள சம்பவத்தில், சாலையை மறித்து நிறுத்தப்பட்ட அந்த இரண்டு வாகன உரிமையாளர்கள், மற்றும் வலது புறம் விரைந்து வரும் வாகனங்களைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக உள் நுழைந்து விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரும் கொலைக் குற்றவாளிகள் என்று கருதலாமா ? யாரோ அலட்சியமாக செய்யும் தவறுக்கு யாரோ இருவர் இறந்தே போய்விட்டார்களே. அவர்களைப் பெற்றவர்களும் குடும்பத்தாரும் எத்தனை வேதனை அனுபவித்திருப்பார்கள்? ஆனால், இந்தியாவில், இந்த குற்றவாளிகளாக கருதப்படலாம் என்பவர்கள் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படாமல், ஜாலியாக தப்பி விட்டார்களே.

தேசிய நெடுஞ்சாலையிலேயே சாலையின் உட்தடங்களை வழிமறித்து லாரியையும், கார்களையும் நிறுத்துகிறார்கள். எத்தனை ஆபத்து மிகுந்தது என்று தெரிந்தும் இப்படி நிறுத்தும் கோர மனப்பான்மை கொண்டவர்களை என்னவென்று சொல்வது ?

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் சாலைகள் மிக அகலமாக இருந்தும், சாலை முழுவதையும் பயன்படுத்த முடியாத அவல நிலை தான் காணப்படுகிறது. எல்லா பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து சாலைகளை முற்றிலுமாக முடக்கி, ஒரு சிறிய வழியை மட்டும் விட்டுவிட்டு மிகுந்த நெரிசலை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதனால் பலருக்கு எரிபொருள் வீணாகி, செலவுகள் அதிகரித்து, அவர்களுடைய நேரமும் உற்பத்தி அளவும், பொருளாதாரமும் வீணாகிறது.

காவல்துறை அதிகாரிகள் இதை உன்னிப்பாக கவனித்து, வெறும் மைக் கொண்டு சொல்லிக்கொண்டே செல்லாமல், சாலையை மறித்து வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு பெரிய அபராதத் தொகை விதித்து கட்டுப்படுத்த வேண்டும். கல்லூரியில் இருக்கும் தன்னார்வ அமைப்புக்கள் போன்றவற்றில் உள்ளவர்களையும் இந்த சேவைக்கு பயன்படுத்தலாம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு.