கோவிட்-19 கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கு பெயர் அறிவிப்பு

கோவிட்-19 கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கு பெயர் அறிவிப்பு

சீனாவில் உருவாகி, தற்போது உலகம் எங்கும் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கு கோவிட்-19 எனப் பெயரிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவின் ஊகான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது மேலும் இந்த கிருமி பரவாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோய் பரவாமலிருக்க ரோபோக்கள் உதவியும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வருகிறது சீனா.

கொரோனா பீதி தற்போது சிங்கப்பூரையும் விட்டுவைக்க வில்லை. ஒரு குறிப்பிட்ட வங்கி ஊழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதால் முன்னூறுக்கும் மேற்பட்ட தனது ஊழியர்களை அந்த வங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

தற்போதைய நிலவரப்படி 20 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 44 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் நோய்க்கு அதிகாரப்பூர்வ பெயர் வைத்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கொரோனா வைரஸ் நோய் ஆகிய வார்த்தைகளின் சொற்களை இணைத்து கோவிட்-19 என்று அதிகாரப்பூர்வமாக இந்த பெயரை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 19 என்பது ஆண்டு 2019 ஐக் குறிப்பதாக உள்ளது.

இந்த வைரஸ் மேலும் பரவாமலும், இதற்கு உரிய மருந்தை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் அனைத்து மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.