உங்கள் வீடு மனை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா? அப்ப இதை செய்யுங்க.

உங்கள் வீடு மனை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா? அப்ப இதைச் செய்யுங்க.

ஆவணங்கள் அனைத்தும் திரட்டிக் கொள்ளுங்கள்.

முதலாவதாக, உங்கள் வீடு அல்லது மனைக்குரிய அனைத்து உரிய ஆவணங்களும் முறையாக இருக்கிறதா என்று சரிபாருங்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில், அந்தந்த ஆவணங்களை உரிய அலுவலகங்களில் சென்று பெற்றுக் கொள்ளுங்கள். விற்பனைப் பத்திரங்கள் (Sale Deed), மூலப் பத்திரங்கள்(Parent deeds), பட்டா, சிட்டா, வரி கட்டிய ரசீதுகள், வில்லங்கச் சான்றிதழ், தடையின்மை (NOC) சான்றிதழ் ஆகியவற்றைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றின் நகல்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.

தூய்மையாகவும் புதிய பொலிவோடும் திகழ வேண்டும்.

நீங்கள் விற்கப்போகும் வீடு அல்லது மனை ஆகியவற்றை மிகவும் தூய்மையாகவும், பார்வைக்கு அழகாகவும் வைத்துக் கொள்ளுங்கள். வாங்க வருபவர்களை முதல் பார்வையிலேயே கவர வைத்து அவர்களுக்கு பிடிக்க வைப்பதற்க்கு இது மிகவும் முக்கியமானதாகும். தேவையில்லாத கழிவுகள், குப்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துங்கள். சாக்கடை, நீர் ஒழுகுதல் போன்றவற்றை சீர் செய்து தூய்மையாக வைத்திருங்கள். முடிந்தால், ஒரு முறை பெயிண்ட் அடிக்கலாம். இது வீட்டை புதுமையானதான ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். காலி மனைகளில், மரங்கள் முட்கள் புதர்கள் ஆகியவற்றை நன்றாக சத்தம் செய்ய வேண்டும். மொத்தத்தில் உங்கள் வீடு அல்லது மனையைப் பார்க்கும் போது புதுமையான தோற்றத்துடனும், சுற்றுப்புறமும் தூய்மையான தோற்றத்தைக் கொடுக்க வேண்டும்.

தகவல் சொல்லுங்கள்

அதாவது விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம் என்றால், பலருக்குத் தெரிய வேண்டும். உங்கள் வீடு மனை விற்பனைக்கு இருப்பதைப் பற்றித் தெரிந்தால் தானே அவர்கள் உங்களை அணுக முடியும். ஆகவே, நண்பர்கள் வட்டம், உறவினர்கள் வட்டம், உங்கள் தெரு கூட்டமைப்பு, உங்கள் நகரின் செய்தித்தாள் ஆகியவற்றில் விளம்பரமும் செய்யலாம். வலைதள நட்புக்களிடமும் உங்கள் வீடு மனை பற்றி தெரியப்படுத்தலாம். உங்கள் வீடு மனையின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் தெருவில் வசிப்பவர்களுக்கும் தெரியப் படுத்துங்கள். உங்கள் தேவைக்கேற்ப, பெரிய செய்தித் தாள்களிலும் விளம்பரம் செய்யலாம். www.99acres.com, www.magicbricks.com www.nobroker.in www.housing.com போன்ற வலைதளங்களிலும் உங்கள் வீடு மனை பற்றிய தகவல்களை விளம்பரம் செய்யுங்கள்.

விளம்பர குறிப்பு

விளம்பரம் செய்யும் போது, உங்கள் வீடு மனை பற்றிய தகவல்களை மிகவும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அருகில் இருக்கும் வசதிகளையும் தெரிவிக்க வேண்டும். ரயில் நிலையத்திலிருந்து, விமான நிலையத்திலிருந்து, நகரின் மிக முக்கிய இடங்களிலிருந்து எவ்வளவு தூரம், பேரூந்து நிலையத்திலிருந்து எவ்வளவு தூரம், மருத்துவமனை எவ்வளவு தூரம், பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது ஆகிய தகவல்களில் வாங்குபவருக்குப் பிடித்தமானதாகவும், வாங்குவதற்க்கு ஆதரவாகவும் இருக்கும் தகவல்களைப் பகிரலாம்.

தரகர் ஆலோசனை

உங்களுக்குத் தெரிந்த தரகர்களிடமும் உங்கள் வீடு மனை பற்றித் தெரிவிக்கலாம். உங்கள் வட்டாரம், ஊர், தலைநகர் ஆகியவற்றில் இருக்கும் நம்பகத்தகுந்த தரகர்களிடமும் தெரிவிக்கலாம். அனுபவம் வாய்ந்த தரகர்கள் உங்கள் பகுதியைப் பற்றியும், உங்கள் பகுதியின் லாப நட்டங்களை நன்கு அறிந்து வைத்திருப்பர். உங்கள் வீடு மனை நல்ல விலைக்கு விற்க நல்ல ஆலோசனைகளும் தரலாம்.

விலை நிர்ணயம்

வாங்குபவர்கள் உங்களை அழைக்கத் துவங்கும் முன்னர், உங்கள் வீடு மனையின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வட்டாரத்தில் பொதுவாக என்ன விலைக்குப் போகிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த விலையை ஒட்டியே இருப்பது நல்லது. உங்கள் வீடு மனைகளின் பல்வேறு சிறப்புக்களாலும் வசதிகளாலும் இந்த விலை மாறும். வாங்குபவர்கள் விலை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினால்(பேரம் பேசினால்), உங்களால், எவ்வளவு வரை குறைக்க முடியும் என்பதையும் முதலிலேயே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்கள் விலையில் சற்று ஏற்றம் இறக்கம் செய்ய இடம் கொடுத்து தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

வாங்குபவர்களை புன்னகையோடு கையாளுங்கள்.

நீங்கள் விளம்பரம் செய்துவிட்டாலோ, மற்றவர்களிடம் சொல்லிவிட்டாலோ, உங்கள் வீடு மனைகளைப் பார்வையிட வருவார்கள். உங்கள் கைபேசி ஒலிக்கத் துவங்கும். ஒரு அழைப்பைக் கூட விட்டு விடாமல், அவர்கள் கேட்கும் தகவல்களை அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிரமம் ஏதும் கொடுக்கமால், உங்கள் வீடு மனை இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களையும், அங்கு எப்படி வருவது என்ற தகவலையும் கொடுக்க வேண்டும். கூகுள் கொகேஷனும் பகிரலாம். அவர்களை புன்னகையுடன் வரவேற்று, சுற்றிக் காட்டுங்கள். நல்ல வசதிகளை மேற்கோள் காட்டி எடுத்துக் கூறுங்கள். அவர்கள் கேட்கும் வினாக்கள் அனைத்திற்க்கும் எந்த ஒளிவு மறைவு இன்றி பதில் அளியுங்கள்.

உங்கள் வீடு மனை நல்ல விலைக்கு விற்பனையாக வாழ்த்துக்கள்.