28ஆ 29ஆ? லீப் இயர் ஏன் வருகிறது?

28ஆ 29ஆ? லீப் இயர் ஏன் வருகிறது?

நடக்கும் வருடத்தை நான்கால் வகுத்து மீதி பூஜ்யம் வந்தால் லீப் இயர் என்று நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதாவது நான்கு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்திற்க்கு 29 நாட்கள். மற்ற ஆண்டுகளில் 28 நாட்கள். ஏன் இந்த கணக்கிடும் முறை வந்தது ?

நாம் இன்னும் இன்றும் பயன்படுத்தி வரும் நாட்காட்டி முறையானது பழங்கால கிரேக்க (கத்தோலிக்க கிருகோரியன்) நாட்காட்டி முறையாகும். இதன் முறைப்படி தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதம் 29 நாட்கள் வருகிறது.

பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது. மேலும் சுரியனையும் சுற்றி வருகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் 24 மணி நேரம் ஆகும். இந்த ஒரு நாள் நேரத்தை அளவீட்டுக் கருவியாக வைத்து, பூமி சூரியனைச் சுற்றி வரும் நேரத்தை அளவிட்டால், 365.25 நாட்களாகிறது. அதாவது, பூமி தன்னைத் தானே 365.25 முறை சுற்றிக் கொண்டிருக்கும் போது, சூரியனைச் சுற்றி வரும் சுற்றில் ஒரு சுற்று நிறைவடைகிறது.

இதனால், நாம் பூமி தன்னைத் தானே சுற்றும் நேரத்தை அளவு கோலாகக் கொண்டு சூரியனைச் சுற்றும் நேரத்தைக் கணக்கிடும் போது, ஒவ்வொரு வருடமும் .25 நாட்கள் குறைத்து கணக்கிடுகிறோம். இந்த .25 நாட்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் போது ஒரு நாளாக கருதி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதை ஈடு கட்ட ஒரு நாளாக கணக்கிட்டுக் கொள்கிறோம். பிப்ரவரியில் ஏற்கனவே குறைவான நாட்களாக 28 நாட்களே உள்ள நிலையில், இந்த பிப்ரவரியில் இதை 29 ஆவது நாளாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணைத்து கணக்கிடப்படுகிறது.

பூமி தன்னைத் தானே சுற்றி வரும் நேரத்தின் கால அளவு வேறு. பூமி சூரியனைச் சுற்றி வரும் கால அளவு வேறு. பூமி தன்னைத் தானே சுற்றும் கால அளவு ஒரு நாள், அதாவது 24 மணி நேரம். இந்த அளவை வைத்து நாம் பூமி சூரியனைச் சுற்றி வரும் நேரத்தை அளவிடுவதால் கணக்கு இவ்வாறு வருகிறது.

நம் பாரத நாட்டின் பண்டைய கால அளவும், கணக்கீட்டு முறையும் இது போன்று அல்ல. பூமி தன்னைத் தானே சுற்றி வரும் நாள் கணக்கையும், சந்திரன் பூமியைச் சுற்றி வரும் கால அளவையும் அளவீடாகக் கொண்டு மாதங்கள் கணக்கிடப் படுவதால், இந்த சரிக்கட்டும் கணக்கு தேவையில்லாத ஒன்றாகிறது.