அன்பு நெறியை உலகில் பரவியது யார்?

அன்பு நெறியை உலகில் பரவியது யார்?

அன்பு நெறியை வழுவாமல் கடைப்பிடிப்பது யார் ?  அன்பை பற்றி யாருக்கு யார் போதனை செய்ய வேண்டும் ? 

இயற்கை வளம் சூழ்ந்த பறம்பு மலையை சுற்றி முன்னூறு ஊர்களைக் கொண்டது பறம்பு நாடு. அந்த நாட்டை ஆண்ட மன்னர் வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினார். அவரது நாட்டில் இரவலர்களே இல்லாமல் போயினர். மக்கள் அனைவரும் அவரைப் புகழ்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஓர் நாள் பறம்பு மலையைப் பார்க்க தன் தேரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் அந்த மன்னர். அருவிகளின் ஓசை, மலையின் அழகு என்று இயற்கையின் அத்தனை அழகையும் ரசித்துக் கொண்டே வந்தார். மலைப்பகுதி வந்தவுடன் தன்னுடைய அலங்கரிக்கப்பட்ட தேரிலிருந்த மணிகள் அத்தனையும் அகற்றச் சொன்னார். காரணம், அந்த சத்தத்தைக் கேட்டு விலங்குகள் அஞ்சி ஓடாமலிருக்க. மான்கள், மயில்கள், வண்டுகள், தும்பிக்கள் என்று அனைத்தையும் பார்த்து மகிழ்ச்சியுற்றார் மன்னர். தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது.

ஆங்கே, ஓரிடத்தில் முல்லைக் கொடி ஒன்றுக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் அந்தக் கொடி காற்றில் அங்கும் இங்கும் ஆடி அலைந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சியைக் கண்ட மன்னரின் உள்ளத்தில் அந்த முல்லைக் கொடியின் உணர்வுகள் அப்படியே தன் உணர்வுகளாய் உள்ளத்தில் பாய்ந்து, அந்தக் கொடியின் மீது இருந்த அன்பினால் அவர் உள்ளம் துடிதுடித்தது. ஆ என்று அலறி தேரிலிருந்து குதித்தார். முல்லைக் கொடியின் அருகில் சென்று தள்ளாடித் தவிக்கும் அந்த கொடியைப் பார்த்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பி வழிந்தோடியது. முல்லைக் கொடியின் உணர்வுகளை மன்னர் தன்னுடைய உணர்வாக உணர்ந்து அழுதார். முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும் அசைந்து துன்புறுகிறாய். இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே.

மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே. என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.

முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர்.

பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார். தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி.

குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர். குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின.

முல்லைக் கொடியின் அருகே நின்றார். அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார்.
தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது. அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது.

எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார். இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள். அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள்.

மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார். இன்னும் எத்தனை எத்தனை வள்ளல்கள் வாழ்ந்த மண் இது ? நியாயம் கேட்ட கன்றுக்காகத் தன் மகன் இளவரசனையே தேரில் ஏற்றி நீதியை நிலை நாட்டி திருவாரூரில் வாழ்ந்தவன் மனுநீதிச் சோழன். இவ்வாறு எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்தி அன்பே சிவம் என்று வாழ்ந்தது இந்த பாரத பூமி. எத்தனை பெருமை வாய்ந்தது நம் புண்ணிய பூமி ? அந்தப் புண்ணிய பூமியில் நாம் பிறந்து வளர எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் ?

ஆனால், இன்றோ, பல்வேறு தாக்குதல்கள் காரணமாக நம் பழம்பெருமை மறந்து உயிர்களைக் கொன்று அதன் சதையைப் பிய்த்துத் தின்று விட்டு, இது அன்பு நெறி, இவர் அன்பானவர் என்று நமக்குப் போதிக்கப் படுகிறது.

நம் பழமையையும் பெருமையையும் மறக்கடிக்கச் செய்தும், திரித்து எழுதச் செய்தும் நம்மை வேறு உலகிற்கு அடிமையாக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றையெல்லாம் உணர்ந்து அன்பே சிவம் என்றுரைத்த திருமூலர் திருமந்திரம், திருக்குறள் போன்ற நம் அறநூல்களையும் சமய நூல்களையும் கற்று நல்வழியில் பயணம் செய்வோம்.