கண் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க கண் பயிற்சிகள்

ஆரோக்கியமாக கண்களைப் பேண கண் பயிற்சிகள்

அவரச உலகில் நாம் நம்மைக் காத்துக் கொள்ள மறந்து போகும் முக்கியமான நம் உடல் உறுப்புகளுள் ஒன்று கண்கள். சுவர் இன்றிச் சித்திரம் வரைய முடியாது என்பர். அது போல, நம் உடலைப் பேணும் மிக முக்கியமான கடமை நமக்கு இருக்கிறது. அவரச உலகில், இதை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம். உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் நாம் பேணி வந்தால், மருத்துவமனைக்குச் சென்று பெருத்த செலவுகளைச் சந்திக்கும் நிலையை தவிர்க்கலாம். நாம் நம் கடமையைச் செய்ய மறந்து விட்டு, கடவுள் கஷ்டம் கொடுத்து விட்டார் என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை.

ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் தங்கள் உடலைப் பேணுவது எப்படி, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் என்ன என்பதை அறிந்து, அதைத் தம் வாழ்வின் அன்றாட நடவடிக்கைகளின் ஒன்றாக சேர்த்துக் கொண்டால், நமக்கு மறக்காது. அவ்வகையில், கண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று இப்போது காண்போம்.

கண் எரிச்சல், நீர் வடிதல், கண் அரிப்பு, கண் உலர்தல், கண் வீக்கம், கண் உறுத்துதல், கிட்டப் பார்வை, தூரப் பார்வை, என்று கண்களில் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. இன்றைய தலைமுறையினர் நீண்ட நேரம் கணினி திரைகளையும், மொபைல் திரைகளையும் பார்த்துக் கொண்டே இருப்பதால், பல்வேறு உபாதைகளுக்கு எளிதாக ஆளாகின்றனர். அவற்றிலிருந்து தப்பிக்க நாம் அன்றாடம் செய்வது யாது ?

பயிற்சி 1

ஒரு நிமிடத்திற்க்கு 12 முறை கண் சிமிட்ட வேண்டும். நாம் கண் சிமிட்டும் போது, மெல்லிய நீர் திரை பரவி நம் கண்கள் உலர்ந்து போவதைத் தவிர்க்கும். நாம் கண்களைப் போதுமான இடைவெளியில் சிமிட்டாமல் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் உலர்ந்து பல்வேறு உபாதைகளுக்கு வழி வகுக்கும். ஆகவே, கண்களை போதுமான அளவு சிமிட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சிமிட்டாமல், உங்கள் கண்கள் உலர்வதை நீங்களே அறிய முடியும். அப்போது தொடர்ந்து 20 முறை சிமிட்டிக் கொள்ளலாம்.

பயிற்சி 2

திரைகளையும் புத்தகங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கும் போது நம் கண்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் உள்ள பொருளையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால், நம் கண்களோ, அருகாமை தூரத்திலிருந்து எங்கோ பல லட்சம் கிலோமீட்டர் தொலைவில் தெரியும் நட்சத்திரம் வரை துல்லியமாகப் பார்க்கும் திறன் கொண்டது. அத்தகைய திறன் கொண்ட கண்களை ஒரே தூரத்தில் நீண்ட நேரம் பார்க்க வைக்கக்கூடாது. எனவே, அடிக்கடி வேறு வேறு தூரத்தைப் பார்க்க வேண்டும். உட்கார்ந்த இடத்திலேயே சன்னல்களுக்கு வெளியே பார்க்கலாம். வேறு வேறு தூரத்தைப் பார்க்கலாம். சிறிது நேரம் வெளியே சென்று வேறு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கலாம்.

பயிற்சி 3

இளஞ்சூடு கண்களுக்கு இதமாக இருப்பதோடு, கண்களின் களைப்பையும் நீக்கும். உங்கள் கை விரல்களை ஒன்றோடு ஒன்றாக மெதுவாகத் தேய்த்து அதில் உருவாகும் இளஞ்சூட்டினை கண்களில் வைத்து பரவினால், கண்களுக்கு மிகவும் இதமாக இருப்பதோடு களைப்பும் நீங்கும்.

பயிற்சி 4

தினமும் குளிக்கும் போது குளிந்த நீரைக் கைகளில் எடுத்து கண்களில் பரவி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இரண்டு கண்களையும் மாறி மாறி இவ்வாறு செய்யலாம். பக்கெட்டில் முழுமையாக நீர் பிடித்து அந்த நீரில் உங்கள் கண்களை முழுதுமாக திறந்து உள்ளே சிறிது நேரம் வைத்திருந்தால் கண்களுக்கும் பிற உறுப்புகளுக்கும் அது மருந்தாக செயல்படும். மூன்று நான்கு முறை இதை திரும்ப செய்யலாம்.

பயிற்சி 5

கண்களுக்கு போதிய ஓய்வு மிகவும் அவசியம். கண்களுக்கு மட்டுமல்ல, நம் உடல் உறுப்புகளை அனைத்திற்க்குமே போதிய ஓய்வு அவசியம் தேவை. நாம் தூங்கிய பின்னர் நம் உடலில் பல வேலைகள் நடக்கும். போதிய தூக்கம் இல்லையேல், அந்த வேலைகள் எல்லாம் பாதிப்படைந்து, நம் உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆகவே, குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் தினமும் சரியாக படுக்கைக்குச் சென்று விட வேண்டும். நாளின் இடையில் சிறிது நேரம் கண்களை மூடி கண்களுக்கு ஓய்வு கொடுக்கலாம்.

பயிற்சி 6

கண்களின் கருவிழியை நீள்வட்ட பாதையில் மெதுவாக சுழற்ற வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்யலாம்.

பயிற்சி 7

நேராக அமர்ந்து கொண்டு முகத்தைத் திருப்பாமல், கண்களை மட்டும் சுழற்றி வலது ஓரம், இடது ஓரம், மேல், கீழ், பின்னர் வட்டமாகக் கண்களை மெதுவாகச் சுழற்ற வேண்டும். ஓரிரு நிமிடங்கள் இந்த பயிற்சியைச் செய்யலாம்.

பயிற்சி 8

கண்ணாடிகளைப் போட்டுப் பார்ப்பதால், கண்களின் ஆரோக்கியத்திற்க்கு எந்த விட முன்னேற்றமும் நேராது. ஆனால், கண்ணாடிகளைக் கழற்றி விட்டு நீங்கள் சரியாக பார்க்க முயற்சி செய்தால், அதுவே கண்களுக்குச் சிறந்த பயிற்சியாகும். இவ்வாறு தொடர்ந்து முயற்சி செய்தால், உங்கள் கண்கள் முழுவதுமாகக் குணமடையும்.