408 இந்து கோவில்கள் பொம்மை கடைகளாக, உணவகங்களாக பள்ளிக்கூடமாகவும் ஆக்கிரமிப்பு. மீண்டும் கோவிலாக புணரமைக்க முடிவு

408 இந்து கோவில்கள் பொம்மை கடைகளாக, உணவகங்களாக பள்ளிக்கூடமாகவும் ஆக்கிரமிப்பு. மீண்டும் கோவிலாக புணரமைக்க முடிவு

1990 ஆம் ஆண்டிற்க்குப் பிறகு பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள 428 இந்து கோவில்களில் 408 கோவில்களை ஆக்கிரமித்து, அவற்றைக் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் விற்கும் கடைகளாகவும், பள்ளிக்கூடங்களாகவும் மாற்றி விட்டனர். அவற்றை மீண்டும் கோவில்களாக மாற்றி இந்துக்களிடம் கொடுக்க பாக்கிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

பாக்கிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களின் வழிபாட்டு இருப்பிடமான கோவில்கள் மெதுவாக ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் அவை அனைத்தும் பொம்மைகள் விற்கும் கடைகளாகவும், உணவகங்களாகவும், பள்ளிக்கூடங்களாகவும் மாற்றப்பட்டு வருவதை கண்டு வருந்தி அரசிடம் தங்களின் கோவில்கள் மீண்டும் தங்களிடமே கொடுக்குமாறு நீண்ட காலமாக கேட்டு வந்தனர்.

சுதந்திரத்தின் போது, மக்களின் விருப்பங்களை மீறி, பாரத நாடு இரண்டாக பிளக்கப்பட்டது. அப்படி பிளக்கப்பட்ட பாக்கிஸ்தான் பகுதியில் நிறைய கோவில்கள் இருந்தன. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவை நோக்கி வந்து தஞ்சமடைந்தனர். ஆனால், சிலர் தங்கள் இருப்பிடங்களையும் கோவில்களையும் விட்டு வர இயலாமல், அங்கேயே தங்கினர். பின்னர் மெது மெதுவாக இந்த கோவில்கள் அங்கிருக்கும் முஸ்லிம் மக்களால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டு வந்தது. 428 கோவில்களில் இன்று 408 கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த இடம் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. சில இந்து கோவில்களை முஸ்லிம் மதராசாக்களாகவும் மாற்றினர்.

இந்நிலையில் தற்போது பாக்கிஸ்தான் அரசாங்கம் 400 இந்து கோவில்களைப் புணரமைத்து தங்களின் சிறுபான்மை மக்களான இந்துக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

முதலில் சியல்கோட் பகுதியில் புகழ் பெற்ற ஜெகன்நாதர் ஆலயமும், பெஷாவரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் தேஜா சிங்கும் முதலில் புணரமைக்கப் பட இருக்கிறது.

1992 ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் நடைபெற்ற வன்முறைகளுக்குப் பின்னர், மக்கள் இந்த சிவாலயத்திற்க்குச் செல்வதை நிறுத்தி விட்டார்கள்.

பெஷாவரில் உள்ள கோகர்நாத் சிவாலயத்தை மீண்டும் வழிபாட்டுக்குத் திறக்குமாறு பாக்கிஸ்தானில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கோவிலைப் பாரம்பரியச் சின்னமாக அறிவுக்கவும் உத்தவிட்டுள்ளது.

இப்போதிருந்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று இந்து கோவில்கள் புணரமைக்கப்படும். இதற்கு முன்னதாக, அனைத்து பாக்கிஸ்தான் இந்து உரிமைச் சங்கம் நடத்திய கணக்கெடுப்பில் 428 கோவில்களில் 408 ஆக்கிரமிக்கப்பட்டு விட்ட செய்தி அனைவரையும் அதிரச் செய்தது.

பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா பீடத்திற்க்கு பக்தர்கள் செல்லவும் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

கொரனா பற்றிப் பயப்படத் தேவையில்லை – பிரதமர் மோடி

கொரனா பற்றிப் பயப்படத் தேவையில்லை – பிரதமர் மோடி

சீனாவில் துவங்கி உலகம் எங்கும் பரவி வரும் கொரனா வைரஸ் நோய்க்கு இதுவரை மூவாயிரத்திற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த நோய் பல நாடுகளில் பரவி உள்ளதால், இந்த நோய் பற்றிய அச்சம் மக்களிடையே உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் இந்தியாவிலும் 3 பேருக்கு கொரனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் அரசின் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் கொரனா பரவுவது பற்றி மக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை.

வெளிநாடுகளில் இருந்து தான் இந்த நோய் நம் நாட்டிற்க்குப் பரவுகிறது. தினந்தோறும் பல நாடுகளுக்கும் சென்று வருவோர் பல்லாயிரக் கணக்கானோர். சீனா, தென் கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் தான் தற்போது இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆகவே இந்த நாடுகளில் இருந்து வருபவர்களை நன்றாக பரிசோதனை செய்த பின்னரே நம் நாட்டிற்க்குள் அனுமதிக்க வேண்டும்.

இந்நிலையில் இன்று நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கொரனா வைரஸ் பரவ விடாமல் தடுப்பதற்க்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டு இருப்பதாகவும், அனைத்து மாநிலங்களிலும் அமைச்சர்கள் முழுமையாக இந்த பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் நோய்க்கான அறிகுறி பற்றி முழுமையாக ஆய்வு செய்த பின்பே அனுமதிக்கவும், தேவைப்படுபவர்களுக்கு போதிய மருத்துவ உதவிகளும் செய்யப்படுவதாகவும் கூறினார்.

Had an extensive review regarding preparedness on the COVID-19 Novel Coronavirus. Different ministries & states are working together, from screening people arriving in India to providing prompt medical attention.

இதனால், கொரனா பற்றிய அச்சம் மக்களுக்குத் தேவையில்லை என்றும், சிறிதளவு தேவையான முன் எச்சரிக்கை அவரவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதனால் மக்களிடையே நிலவி வரும் அச்சம் போக்கப்பட்டு மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

டெல்லி, தெலங்கானா ஆகிய இடங்களில் புதிய கொரனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது

டெல்லி, தெலங்கானா ஆகிய இடங்களில் புதிய கொரனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் கொரனா வைரஸ் பாதிப்பிற்க்கும் பலியானோர் எண்ணிக்கை 3000 ஐக் கடந்துள்ள நிலையில், இந்தியாவில் புதியதாக இருவருக்கு கொரனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது வரை மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தலா 3 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இத்தாலி நாட்டிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாய் நாட்டிலிருந்து தெலங்கானா வந்து மற்றும் ஒருவருக்கும் கொரனா வைரஸ் தாக்குதல் இருப்பதை உறுதி செய்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம்.

இரண்டு பேரும் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் அவர்களது வெளிநாட்டு பயணம் பற்றிய செய்திகளும் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தது.

ஜப்பான் நாட்டின் அருகே கொரனா வைரஸால் தாக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் முதன் முதலில் இந்த வைரஸ் பரவிய சீனாவின் ஊகான் மாநிலத்தில் இருந்தும் 76 இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

உலகம் முழுவதிலும் 70 க்கும் அதிகமான நாடுகளில் 88,000 பேருக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்னர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதால், மக்கள் தொகை அதிகமான நம் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கை முழு வீச்சில் அமையப் பெறுவது மிகவும் முக்கியமானதாகும். மேலும் ஒவ்வொருவரும் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து அந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது மிக அவசியமாகும்.

வரும் முன்னர் காப்பது எப்படி? கொரனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பது எப்படி?

வரும் முன்னர் காப்பது எப்படி? கொரனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பது எப்படி?

உலகம் முழுவதும் பரவிவிட்ட கொரனா வைரஸ், அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாகும். வெயில் அதிகமாக இருக்கும் இடங்களில் இது வேகமாக பரவாது என்று கருத்து சொல்லப்பட்டாலும் இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.

இருந்தாலும், வரும் முன்னர் காப்பதே அறிவுடையோர் செய்கையாகும். அவ்வகையில், கொரனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது, அதை பாதுகாப்பது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். முக்கியமாக, மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கொரனா வைரஸ் நோய் பாதிப்பு என்று சொல்லக்கூடிய COVID-19 கோவிட்-19 நோய்க்கு இன்றைய தேதி வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இந்த நோயிலிருந்து சிறந்த பாதுகாப்பு என்பது, இந்த நோய் நம்மிடம் தொற்றிக்கொள்ளாமல் இருப்பதே ஆகும். இந்த நோய் நம்மிடம் தொற்றிக் கொள்ளாமல் இருக்க சில வழிமுறைகளை கொரனா வைரஸ் தடுப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவற்றைக் காண்போம்.

சோப்பு போட்டு நன்றாக இரண்டு கைகளையும் 20 விநாடிகள் கழுவ வேண்டும்.

1. இந்த நோய் தொற்று இருப்பவர்களிடம் இருந்து விலகி இருங்கள். அவர்களை எவ்விதத்திலும் தொடாமல் இருங்கள்.

2. உங்களுடைய வாய், மூக்கு மற்றும் கண்களை, உங்கள் கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும்.

3. உங்களுக்கு நோய்க்கான அறிகுறி ஏதும் தென்பட்டால், வெளியே எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலேயே தங்கி இருங்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவமையை அணுகுங்கள்.

4. தும்மல், இருமல் வந்தால், அதை காகிதத்தாலோ, துணியினாலோ மறைத்து, அதைக் குப்பையில் எறிந்து விடவும். மீண்டும் மீண்டும் ஒரே துணி அல்லது காகிதத்தைப் பயன்படுத்தக் கூடாது.

5. உங்கள் வீடு, அலுவலகம் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். அடிக்கடி சுத்தம் செய்வதால், நோய் ஏற்படுத்தும் கிருமிகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.

6. நீங்கள் தொட்டு பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் கிருமிநாசிகளைத் தெளித்து சுத்தப் படுத்த வேண்டும்.

7. நோய் வராமல் இருக்க, முகத்திரை பயன்படுத்துவது அவ்வளவு பயனுள்ளதாக இருப்பதாக தெரியவில்லை. அதனால், அனைவரும் முகத்திரை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், நோய் இருப்பவர்கள் பிறருக்கு தொற்று ஏற்படுத்தாமல் இருக்க, கட்டாயமாக முகத்திரை பயன்படுத்த வேண்டும்.

8. உங்களுக்கு நோய்க்கான அறிகுறி தென்பட்டால் கட்டாயமாக முகத்திரை பயன்படுத்த வேண்டும்.

9. கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுவதே நோய் வராமல் தடுக்க மிகச் சிறந்த பாதுகாப்பு. இரண்டு கைகளையும் முதலில் சுத்தமான நீரில் நன்றாக அலசிக் கொண்டு, பின்னர் சோப்பு போட்டு, கைகளில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் மூலை முடுக்குகளிலும் நன்றாக சோப்பைத் தேய்த்து, குறைந்தது ஒரு 20 விநாடிகளாவது நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

10. கழிவறைக்குச் சென்று வந்த பின்னர், உணவு உண்பதற்க்கு முன்னர், இருமல், தும்மல் வந்து உங்கள் கைகளாலும் காகிதத்தாலும் மறைத்த பின்னரும், மூக்குச்சளி போன்றவற்றை சிந்திய பின்னரும் கண்டிப்பாக சோப்பு போட்டு இரண்டு கைகளையும் நன்றாகக் கழுவ வேண்டும்.

11. சோப்பு இல்லாத தருணத்தில், கைகளைச் சுத்தம் செய்யும் ஹேன்ட் சானிடைசர் Hand Sanitizer பயன்படுத்தி நன்றாக கழுவலாம். அந்த கை சானிடைசரில் குறைந்தது 60% ஆல்கஹால் இருக்க வேண்டும்.

12. அடிக்கடி கை கழுவிக் கொண்டும், உங்கள் இருப்பிடத்தைக் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தியும் வைத்திருக்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை அனைவரும் இப்போது இருந்தே பழக்கப்படுத்திக் கொண்டால், நோய் தொற்றுவதிலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியும்.

அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவரும் சுற்றுப்புறத்தையும் தங்கள் கைகளையும், மேலே குறிப்பிட்டுள்ளபடி சுத்தமாக வைத்துக் கொண்டால், எளிதாக நாம் இந்த நோய்த் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

அனைவரும் சுத்தம் பேணுவோம், நோய்த் தொற்றிலிருந்து நம்மைக் காப்போம்.

வஜ்ரா 6 ஆவது கடற்படை ரோந்து வாகனம் நாட்டுக்காக அர்ப்பணிப்பு

வஜ்ரா 6 ஆவது கடற்படை ரோந்து வாகனம் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் நடந்த விழா ஒன்றில் எல்அன்டி இன் 6 வது தயாரிப்பான வஜ்ரா என்ற கடற்படை ரோந்துக் கப்பல் பிப்ரவரி 27 அன்று திருமதி கீதா மாண்டவ்யா அவர்களால் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. திருமதி கீதா மாண்டவ்யா கப்பல் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவ்யா அவர்களின் மனைவியாவார்.

2015 ஆம் ஆண்டு எல்அன்டி நிறுவனம் மொத்தம் ஏழு கடற்படை ரோந்து வாகனம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை 1432 கோடி ரூபாய்க்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து பெற்றது. இதற்கு முன்னர் நான்கு ரோந்து வாகனங்களைக் கட்டமைத்து அர்ப்பணித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31, 2019 அன்று ஐந்தாவது வாகனத்தை நாட்டுக்காக அர்ப்பணித்தது. இந்த நிலையில் 6 ஆவது வாகனத்தின் கட்டமைப்பு முடிவுற்ற நிலையில் இன்று இந்த வஜ்ராவை நாட்டுக்காக அர்ப்பணித்தது.

இந்த வாகனம் விக்ரம் வாகன அமைப்பைச் சேர்ந்தது. இவை பெரிய தள அமைப்பு கொண்டவை. இதில் ஹெலிகாப்டர் ஏறும் இறங்கும் வசதி உண்டு. இது இந்திய கடல் எல்லைகள் மற்றும் தீவுகளுக்குச் சென்று பணியாற்றும் திறன் கொண்டது. கடற்கரை பாதுகாப்பு ரோந்து பணிகளைச் செய்யவும், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு வேலைகளைச் செய்யவும் கடத்தல் போன்ற செயல்களைக் கண்காணித்து தடுக்கவும், போர் நேரங்களில் சில பயன்பாடுகளுக்கு மட்டுமான பணிகளுக்கு இது பயன்படுகிறது.

97 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலும் 2140 டன் எடையும் கொண்ட இந்த கப்பல் மணிக்கு 26 நாட்டிக்கல் மைல் வேகம் செல்லக்கூடியது. இதில் 30 mm CRN 91 கடற்படை துப்பாக்கிகளும் இரண்டு 12.7 mm கனரக துப்பாக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/mansukhmandviya/status/1232915225600352256

உலகின் 5 ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேற்றம். இங்கிலாந்து பிரான்ஸை முந்தியது.

உலகின் 5 ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேற்றம். இங்கிலாந்து பிரான்ஸை முந்தியது.

இந்தியா 2.94 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளது என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தின் மதிப்பு 2.83 ட்ரில்லியன் அமெரிக்கடாலர், மற்றும் பிரான்ஸ் நாட்டின் மதிப்பு 2.81 ட்ரில்லியன் அமெரிக்கடாலர். இதனால், இந்த இரண்டு நாடுகளையும் முந்தி ஏழாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்க்கு இந்தியா முன்னேறியுள்ளது.

மேலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வாங்கும் திறன் நிலை (GDP PPP) 10.51 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இது ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட அதிகமாகும். இந்தியாவின் அதிக மக்கள் தொகையால், தனி நபர் வருவாய் 2,170 அமெரிக்க டாலராகும். இதே தொகை அமெரிக்காவுக்கு, 62,794 டாலராகும்.

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தற்போது பலனளித்து வருவதால் இந்த வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் சேவைத் துறை தான் உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறை என்றும், இது நம் பொருளாதாரத்தில் 60 சதவிகித பங்கும், 28 சதவிகித வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ரோடு பெருசாத்தான் இருக்கு. ஆனால் போக முடியல. கார் நிறுத்தி வச்சிருக்காங்க. விபத்து வேற.

ரோடு பெருசாத்தான் இருக்கு. ஆனால் போக முடியல. கார் நிறுத்தி வச்சிருக்காங்க. விபத்து வேற.

பெரிய நகரங்களில் இன்று போக்குவரத்து மிகுந்த சவாலாக இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க்குச் செல்லும் நேரம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல வாகனங்கள் வீணாக எரிபொருளை எரித்து வீணாக்கி மாசுக்களை ஏற்படுத்தவோடு ஒவ்வொருவரையும் ரோட்டிலேயே அதிக நேரம் நிற்க வைத்து ஒவ்வொருவரின் உற்பத்தி அளவைக் கணிசமாகக் குறைத்துவிடுகிறது. இது நம் பொருளாதாரத்தில் மிகுந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சவாலான பல போக்குவரத்து பிரச்சனைகளையும் சமாளித்து நம் காவல்துறை மிகுந்த கவனத்துடன் சிறப்பான பணியாற்றி வருகிறது. ஆனால், காவல்துறை மட்டுமே அனைத்தையும் செய்ய இயலுமா ? வாகன ஓட்டிகளுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டாமா ?

இன்றைய போக்குவரத்து நெரிசல் காரணமாக இருக்க ஒரு முக்கிய காரணம், சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்தாமல், வாகனங்களை நிறுத்தி வைக்கும் வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதால் தான். சாலைகள் என்னமோ 100 அடி, 160 அடி, 80 அடி என்று அகலமாகத் தான் இருக்கும். ஆனால், சாலைகள் எத்தனை அடி அகலமாக இருந்தாலும், ஒரே ஒரு நான்கு சக்கர வாகனம் செல்ல மட்டும் இடம் கொடுத்துவிட்டு மற்ற இடங்களில் எல்லாம் தங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள். சிறு சிறு சாலைகளில் செய்தால் கூட பரவாயில்லை, பிரதான சாலைகளிலேயே மிகவும் குறுகிய இடத்தில் கூட கொஞ்சம் கூட கவலையில்லாமல் வைத்துக் கொள்கிறார்கள். நிமிடத்திற்க்கு 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் சாலையிலேயே தைரியமாக தங்கள் கார்களை நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள். லட்சம் பேர் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, என் கார் இங்கு நின்றால் போதும் என்ற சுயநல மனப்பான்மை எத்தகைய கீழ்த்தரமானது?

ஒரு சிலரின் சுயநல மனப்பான்மையும் அலட்சியமும் பலருக்குத் தொந்தரவாக இருப்பது நம் சமுதாயத்தில் தான். இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய், வாகனத்தில் இருந்தபடியே கடைக்காரர்களிடம் பொருட்களை வாங்குவதும், காசு கொடுப்பதுமான காட்சி மிகவும் வேதனைக்குரியது. சாலைகளில் நிறுத்தப்படும் கார்களை சிறிது தூரம் தள்ளி போக்குவரத்திற்க்கு இடைஞ்சலாக இல்லாமல் நிறுத்த முடியும். ஆனாலும் செய்ய மாட்டேன் என்கிறார்கள். கார்களை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்தால் என்ன ஆகிவிடும் ? உடலில் 10 கிலோ குறைந்து விடுமோ என்னவோ ?

இது பல விபத்துக்கள் நடப்பதற்க்கு முக்கிய காரணமாகவும் அமைகிறது. ஆனால், இதை யாரும் உன்னிப்பாக கவனித்துப் பொருட்படுத்துவதே இல்லை. இரண்டு வாகனங்கள் எதிர் எதிரே செல்லும் செல்லும் அளவு சாலையில் இடம் இருந்தும், ஒரு வாகனத்தை நிறுத்தி வைப்பதால், ஒரு வாகனம் மட்டுமே செல்ல இடம் இருக்கும். எதிர் எதிரே வரும் வாகனங்கள் யார் முதலில் இந்த இடத்தில் நுழைவது என்ற குழப்பத்தில் விபத்து நேர்ந்துவிடுகிறது. இவர்கள் இருவரும் குடுமிப்பிடி சண்டை போடுகிறார்கள். ஆனால், இந்த விபத்துக்கு மூல காரணமான, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் மறந்தே போய் விடுகிறார்கள்.

நிறைய ஆட்டோக்களும் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டோ, அல்லது சவாரி தேடி மெதுவாக சென்றோ சாலையின் உட்தடங்களை முடக்கி பல விபத்துக்கள் ஏற்பட காரணாக இருக்கிறது.

சென்ற ஆண்டு நந்தனம் அருகே நடைபெற்ற இந்த சாலை விபத்து காணொளியை கூர்ந்து கவனியுங்கள். காமிராவிற்க்கு முன்னால் இரண்டு வாகனங்கள், ஒன்று சரக்கு வேன் மற்றொன்று அவசர ஊர்தி போன்ற வாகனம், அவசரம் இல்லாத நிலையில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலை நான்கு தடங்கள் (Lanes) கொண்ட சாலையாக இருந்தாலும், இந்த இரண்டு வாகனமும் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு அந்த கடைசி தடங்கள் வாகன போக்குவரத்து செய்ய இயலாத படி முழுவதுமாக அந்த தடத்தை தடை செய்து விட்டது. அடுத்தது, பக்கத்து சாலையிலிருந்து பிரதான சாலைக்கு நுழையும் ஆட்டோவைக் கவனியுங்கள். வலதுபுறம் எத்தனை வேகமாக வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன? அது எதையுமே பொருட்படுத்தாது, அந்த ஆட்டோ ஓட்டுநர், இரண்டாவது தடத்தில் வேகமாக நுழைகிறார். பக்கத்து சிறிய சாலையிலிருந்து பிரதான சாலைக்குள் நுழைபவர்கள் நின்று, பின்னர் வலது புறம் பார்த்து, தாங்கள் நுழைவதால் எந்த வாகனத்திற்க்கும் தடங்கல் வராது என்பதை உறுதி செய்து கொண்டு நுழைய வேண்டும். ஆனால், இந்த ஆட்டோ ஓட்டுநர் எதையுமே சட்டை செய்யவில்லை. இந்நிலையில் அங்கே, இரண்டு இருசக்கர வாகனங்கள் விரைந்து வந்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இணையாக, அரசு பேரூந்தும் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. விரைந்து வந்து கொண்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ நுழைவதை சற்றும் எதிர்பாராமல், வலது புறம் செல்வதற்க்கு எத்தனிக்க, ஒரு வாகனத்தில் உள்ளவர் வெகு அருகில் வரக்கூடிய இரண்டு பேர் வரும் வாகனத்தின் மீது நிலை தடுமாறி விழ, அவர்களும் நிலைகுலைந்து அரசுப் பேரூந்து மீது விழுந்து இறந்தே விட்டார்கள்.

இது விபத்து என்று கருதப்பட்டு மூடப்பட்டுவிட்டது. இங்கு தப்பு செய்தவர்கள் யார் ? விபத்துக்கள் நடக்கும் இடங்கள் எல்லாம் கூர்ந்து கவனியுங்கள். சாலையை ஆக்கிமித்தும் வழி மறித்தும், சாலையின் உட்தடங்களை முழுமையாக மறித்தும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இதனால், ஏற்படும் வாகன நெறிசலை, அந்த வாகனத்தின் ஓட்டுநர் பக்கத்தில் நின்று டீ குடித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருப்பார். மேலே உள்ள சம்பவத்தில், சாலையை மறித்து நிறுத்தப்பட்ட அந்த இரண்டு வாகன உரிமையாளர்கள், மற்றும் வலது புறம் விரைந்து வரும் வாகனங்களைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக உள் நுழைந்து விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரும் கொலைக் குற்றவாளிகள் என்று கருதலாமா ? யாரோ அலட்சியமாக செய்யும் தவறுக்கு யாரோ இருவர் இறந்தே போய்விட்டார்களே. அவர்களைப் பெற்றவர்களும் குடும்பத்தாரும் எத்தனை வேதனை அனுபவித்திருப்பார்கள்? ஆனால், இந்தியாவில், இந்த குற்றவாளிகளாக கருதப்படலாம் என்பவர்கள் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படாமல், ஜாலியாக தப்பி விட்டார்களே.

தேசிய நெடுஞ்சாலையிலேயே சாலையின் உட்தடங்களை வழிமறித்து லாரியையும், கார்களையும் நிறுத்துகிறார்கள். எத்தனை ஆபத்து மிகுந்தது என்று தெரிந்தும் இப்படி நிறுத்தும் கோர மனப்பான்மை கொண்டவர்களை என்னவென்று சொல்வது ?

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் சாலைகள் மிக அகலமாக இருந்தும், சாலை முழுவதையும் பயன்படுத்த முடியாத அவல நிலை தான் காணப்படுகிறது. எல்லா பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து சாலைகளை முற்றிலுமாக முடக்கி, ஒரு சிறிய வழியை மட்டும் விட்டுவிட்டு மிகுந்த நெரிசலை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதனால் பலருக்கு எரிபொருள் வீணாகி, செலவுகள் அதிகரித்து, அவர்களுடைய நேரமும் உற்பத்தி அளவும், பொருளாதாரமும் வீணாகிறது.

காவல்துறை அதிகாரிகள் இதை உன்னிப்பாக கவனித்து, வெறும் மைக் கொண்டு சொல்லிக்கொண்டே செல்லாமல், சாலையை மறித்து வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு பெரிய அபராதத் தொகை விதித்து கட்டுப்படுத்த வேண்டும். கல்லூரியில் இருக்கும் தன்னார்வ அமைப்புக்கள் போன்றவற்றில் உள்ளவர்களையும் இந்த சேவைக்கு பயன்படுத்தலாம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு.

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதன் முதலில் சிவபெருமானுக்கு ஓர் இருக்கை அமைப்பு

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதன் முதலில் சிவபெருமானுக்கு ஓர் இருக்கை அமைப்பு

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயிலை நேற்று ஞாயிறன்று பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் காசியிலிருந்து துவக்கி வைத்தார்கள். இந்த ரயிலானது இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று ஜோதிர்லிங்க சிவாலயங்களை இணைத்துச் செல்வதாகும்.

இந்த ரயிலில் உயர்தர சைவ உணவு வழங்கும் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ள உணவறை உள்ளது. மேலும் நல்ல படுக்கை வசதி, நல்ல பராமரிப்பு வசதி மற்றும் பயண காப்புத்திட்டம் என்று பயணம் இனிமையாக அமைய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த ரயிலானது இந்தூர் அருகிலுள்ள ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க தலம், உஜ்ஜயினி மாகாளேஸ்வரர் திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகிய மூன்று ஜோதிர்லிங்க தலங்களையும் இணைத்துச் செல்லும்.

இந்த ரயிலில் சிவபெருமானுக்கு என்று தனியாக ஒரு இருக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு ரயிலில் இறைவனான சிவபெருமானுக்கு ஒரு இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இருக்கையின் மீது கோவில் படம் வரையப்பட்டுள்ளது. யாரும் அறியாமல் அந்த இருக்கையில் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, என்று வடக்கு ரயில்வே செய்தியாளர் திரு தீபக்குமார் தெரிவித்தார்.

மெல்லிய தெய்வீக பாடல்களுடன், ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பாதுகாவலர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சைவ உணவு மட்டும் தான் வழங்கப்படுகிறது. மேலும், ரயில் முழுவதும் 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வாரத்திற்க்கும் மூன்று முறை வாரணாசியிலிருந்து இந்தூர் வரை செல்கிறது.

தமிழ் இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்.

தமிழ் இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்.

இது நீங்கள் படிக்கும் இன்னும் ஒரு பதிவு அன்று. தமிழர்கள் ஆழ்ந்து சிந்தித்து மீண்டும் அலட்சியம் செய்து தூக்கத்திற்க்குப் போகாமல் உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது. இது ஒரு அபாய எச்சரிக்கை மணி.

இந்த சுய பரிசோதனையை இன்றே செய்து பாருங்கள். நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசி அல்லது பேசுவதை உங்கள் கைபேசியில் ஒலிப்பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதில் எத்தனை ஆங்கில வார்த்தைகள் எத்தனை தமிழ் வார்த்தைகள் இருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். 30-40 சதவிகிதத்திற்ககு மேல் தமிழ் வருகிறதா என்று பாருங்கள். மீண்டும் ஒரு முறை ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்து பாருங்கள். இன்னும் 10 சதவிகிதம் மட்டுமே முன்னேறும். பல வார்த்தைகளுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்றே தெரியாமல் திணறுவீர்கள்.

நாம் தமிழர், நான் திராவிடன், தமிழ் தொன்மையான மொழி, தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்றெல்லாம் வீர வசனம் பேசும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம் இது. கடந்த பல பத்தாண்டுகளில், எத்தனை அரசியல் கட்சிகள் தமிழை வைத்து அரசியல் செய்து விட்டன ? தமிழை வைத்து சம்பாதித்து விட்டன ? அவையெல்லாம் நம் தாய் மொழி தமிழை வளர்க்க ஏதாவது ஒரு சிறு துரும்பாவது முயற்சி செய்தனவா ? ஆங்கில கலப்பை தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி செய்தனவா ?

அடுத்த தலைமுறை அல்லது உங்கள் குழந்தைகளின் பேச்சை இதே பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் முடிவு இன்னும் அபாயகரமாக இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க என்ன சிரத்தை எடுத்தீர்கள் ? உங்களின் அடுத்த தலைமுறைக்கு எத்தனை தமிழ் போதிக்கப்படுகிறது. தமிழைத் துறந்து பிற முக்கிய பாடங்கள் படிக்க வேண்டும் என்று மருத்துவர், பொறியாளர் என்று படிக்க வைத்தவர்கள் எல்லாம் இன்று மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்க்கு வேலை செய்யும் நிலை. பொறியாளர்களின் நிலையோ இன்னும் மோசம்.

இன்னொரு பக்கம் தமிழில் பேசுவதை இழிவாகத் தானே கருதுவது. உலகிலேயே யாருக்குமே இல்லாத வியாதி இது. உலகில் இருக்கும் அனைவரும் தங்கள் மொழியில் பேசுவதை மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் மட்டும் இதற்குப் புறம்பாக இருக்கிறது. நம் தாழ்வு மனப்பான்மையை நன்றாகத் தூண்டி விட்டு, அதை பயன்படுத்திய பல காலம் அந்நிய ஆட்சி நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளாக நம்மை சீரழித்த அந்நிய ஆட்சியின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நாம் இன்னும் மீளவே இல்லை. முக்கியமாக நம் இளைய தலைமுறையினருக்கு, வெளிநாடு படங்கள், கதை புத்தகங்கள் சிறந்தவை என்றும் நம் நாட்டு பொருட்கள் உப்பில்லாதவை என்று தவறான கண்ணோட்டம் புகுத்தப்படுகிறது. வியாபார நோக்கத்திற்க்காக நம் ஆட்களே இதற்குத் துணை போகிறார்கள். ஆகவே, இளைஞர்கள், தவறான பாதையிலேயே வளர்ந்து நம் சமுதாயத்தைச் சீரழிக்கின்றனர். வயது வந்து முதிர்வு வந்த பின்னர், தமிழில் பேச முயன்றாலும் முடியாத இழிவான நிலை. கேவலம்.

உலகிலேயே உயர்ந்த நூல்கள் இருப்பது தமிழில் தான். நான்கு வேதங்கள் இருந்தது தமிழில் தான். எண்ணற்ற நுண்ணிய அறிவுப் புதையல்கள் இருப்பது தமிழில் தான். இயல் இசை நாடகம் என்று பிரிவுகளில் தமிழ் வளர்ந்தது இங்கே தான். சங்கம் வைத்து தமிழ் வளர்ந்தது உலகிலேயே இங்கு தான். எத்தனை எத்தனை அரிய நூல்கள் ? இத்தனை நூல்கள் இருந்தும், நம் இளையவர்கள் கேக்ஸ்பியர் நாவல் பற்றி பெருமையாக பேசுவது எத்தனை இழிவான நிலை ? கொடுமை. தமிழின் வளர்ச்சிக்கு எல்லாக் காலங்களிலும் ஆட்சி செய்யும் மன்னர்கள் துணை நின்றார்கள். ஆனால், சனநாயக ஆட்சியிலோ, தங்கள் அரியணையைத் தக்க வைப்பதிலேயே மன்னர்கள் காலம் போக்குகிறார்கள். அப்படி நல்ல நிலையில் இருந்தாலும், அலட்சியமாக இதைப் பற்றி எதுவும் செய்வதில்லை.

தெய்வம் பேசிய தமிழ், தெய்வத்தமிழ் என்றெல்லாம் பெருமை பேசுகிறோம். அப்படி தெய்வம் தமிழில் என்ன பேசியது என்று என்றைக்காவது கேட்டதுண்டா ? அலட்சியமே நம்மை அழிக்கும் முதல் எதிரி.

ஆங்கில கலப்பை நீக்கிப் பேச நாம் என்ன முயற்சி செய்யப் போகிறோம் ? நம் மன்னர்களாகிய அமைச்சர்கள் என்ன முயற்சி செய்யப்போகிறார்கள் ? பேசுவதில் பலனில்லை. அவற்றை நடைமுறைப்படுத்தி மேம்படுத்தி சாதித்துக் காட்ட வேண்டும்.

ஒவ்வொருவரும் ஆங்கிலக் கலப்பு நீக்கி பேச முயற்சி செய்ய வேண்டும். பல ஆங்கில வார்தைதகளுக்குத் தமிழ் வார்த்தைகள் தேட வேண்டும். அவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். பழக பழக சில மாதங்களில் ஆங்கிலம் நீக்கி கட்டாயமாக நாம் பேச இயலும். சித்தரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டிலும், அலுவலகத்திலும், நட்பு வட்டங்களிலும், உறவு வட்டங்களிலும் ஆங்கிலம் கலவாத தமிழ் பேச முயற்சி செய்யுங்கள். உங்கள் அடுத்த தலைமுறைக்கு மறவாமல் நல்ல தமிழ் பேச எழுத பயிற்சி கொடுங்கள். நீங்கள் வீட்டில் அவர்களோடு நல்ல தமிழில் பேசினாலே, அது அவர்களுக்குச் சிறந்த பயிற்சி. அதை விட வேறு பயிற்சி தேவையில்லை.

இதோ அபாய எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அணு ஆயுதங்கள் எண்ணிக்கையில் இந்தியா 7ஆம் இடம், பாக்கிஸ்தான் 6ஆம் இடம்.

அணு ஆயுதங்கள் எண்ணிக்கையில் இந்தியா 7ஆம் இடம், பாக்கிஸ்தான் 6ஆம் இடம்.

மிகவும் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்கள் பட்டியலில் இந்தியா தற்போது 7 ஆவது இடத்தில் இருக்கிறது. ஹிரோஷிமா நாகசாகியை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகள் இன்றும் உள்ளன. மனிதன் நினைத்தால் ஒரு கணப் பொழுதில் இந்த பூமியில் இருக்கும் உயிர்களை அழித்து விடலாம். ஆக்கத்திற்க்குப் பலநாள் வேலை அழிப்பவனுக்கு ஒருநாள் வேலை என்பது பழமொழி. அழிவுக்குப் பயன்படும் அணு ஆயுதங்கள் இன்று எத்தனை உள்ளன? எங்கு உள்ளன?

உலகிலேயே அனைத்து நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 14,000 அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையாக 90 சதவிகிதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளில் தான் உள்ளது.

ரஷ்யா மொத்தம் 6490 அணு ஆயுதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவதாக அமெரிக்காவிடம் 6185 அணு ஆயுதங்கள் உள்ளன.

மூன்றாவதாக பிரான்ஸ் நாட்டிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளது.

280 அணு ஆயுதங்கள் கொண்டு சீனா நான்காவது இடத்திலும் 215 அணு ஆயுதங்கள் கொண்டு இங்கிலாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

நம் அண்டை நாடான பாக்கிஸ்தான் மொத்தம் 160 அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறது.

140 அணு ஆயுதங்களுடன் இந்தியா பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

இஸ்ரேல் 90 அணு ஆயுதங்களுடன் எட்டாம் இடத்திலும், 30 அணு ஆயுதங்களோடு வடகொரியா ஒன்பதாம் இடத்திலும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அணு ஆயுதங்களை கட்டுக்குள் வைத்திருக்கவும், பன்னாட்டு அமைப்பாக ஆம்ஸ் கன்ட்ரோல் அசோசியேன் செயல்பட்டு வருகிறது.

Image Source: ArmsControl.org