சமூக வலைதளங்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விலகுகிறார்? பின்பற்றுபவர்கள் அதிர்ச்சி.

சமூக வலைதளங்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விலகுகிறார்? பின்பற்றுபவர்கள் அதிர்ச்சி.

முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதளங்களிலிருந்து மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விலகும் முடிவு பற்றிய செய்தியை வரும் ஞாயிறுக்குள் தெரிவிக்க இருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய தலைவர்கள், தங்களின் மிகவும் நெருக்கடியான பணிகளுக்கு இடையே மக்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வதற்க்காக சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளில் கணக்குகள் தொடங்கி மிகவும் பிரபலம் ஆனார்கள். அவ்வகையிலே, நம் பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களும் இந்த சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பலருக்கு செய்திகளையும் தங்கள் நிலைகளையும் தெரிவித்து வந்தார்கள்.

இதற்கிடையே இன்று நம் பிரதமர் மோடி அவர்கள் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதளங்கலிலிருந்து விலகுவது பற்றிய முடிவை வரும் ஞாயிறுக்குள் தெரிவிப்பதாக ட்விட் செய்துள்ளார்கள்.

இது அவரைப் பின்பற்றும் பல லட்சக்கணக்கானவர்களை அதிச்சியடையச் செய்துள்ளது.

ரோடு பெருசாத்தான் இருக்கு. ஆனால் போக முடியல. கார் நிறுத்தி வச்சிருக்காங்க. விபத்து வேற.

ரோடு பெருசாத்தான் இருக்கு. ஆனால் போக முடியல. கார் நிறுத்தி வச்சிருக்காங்க. விபத்து வேற.

பெரிய நகரங்களில் இன்று போக்குவரத்து மிகுந்த சவாலாக இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க்குச் செல்லும் நேரம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல வாகனங்கள் வீணாக எரிபொருளை எரித்து வீணாக்கி மாசுக்களை ஏற்படுத்தவோடு ஒவ்வொருவரையும் ரோட்டிலேயே அதிக நேரம் நிற்க வைத்து ஒவ்வொருவரின் உற்பத்தி அளவைக் கணிசமாகக் குறைத்துவிடுகிறது. இது நம் பொருளாதாரத்தில் மிகுந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சவாலான பல போக்குவரத்து பிரச்சனைகளையும் சமாளித்து நம் காவல்துறை மிகுந்த கவனத்துடன் சிறப்பான பணியாற்றி வருகிறது. ஆனால், காவல்துறை மட்டுமே அனைத்தையும் செய்ய இயலுமா ? வாகன ஓட்டிகளுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டாமா ?

இன்றைய போக்குவரத்து நெரிசல் காரணமாக இருக்க ஒரு முக்கிய காரணம், சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்தாமல், வாகனங்களை நிறுத்தி வைக்கும் வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதால் தான். சாலைகள் என்னமோ 100 அடி, 160 அடி, 80 அடி என்று அகலமாகத் தான் இருக்கும். ஆனால், சாலைகள் எத்தனை அடி அகலமாக இருந்தாலும், ஒரே ஒரு நான்கு சக்கர வாகனம் செல்ல மட்டும் இடம் கொடுத்துவிட்டு மற்ற இடங்களில் எல்லாம் தங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள். சிறு சிறு சாலைகளில் செய்தால் கூட பரவாயில்லை, பிரதான சாலைகளிலேயே மிகவும் குறுகிய இடத்தில் கூட கொஞ்சம் கூட கவலையில்லாமல் வைத்துக் கொள்கிறார்கள். நிமிடத்திற்க்கு 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் சாலையிலேயே தைரியமாக தங்கள் கார்களை நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள். லட்சம் பேர் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, என் கார் இங்கு நின்றால் போதும் என்ற சுயநல மனப்பான்மை எத்தகைய கீழ்த்தரமானது?

ஒரு சிலரின் சுயநல மனப்பான்மையும் அலட்சியமும் பலருக்குத் தொந்தரவாக இருப்பது நம் சமுதாயத்தில் தான். இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய், வாகனத்தில் இருந்தபடியே கடைக்காரர்களிடம் பொருட்களை வாங்குவதும், காசு கொடுப்பதுமான காட்சி மிகவும் வேதனைக்குரியது. சாலைகளில் நிறுத்தப்படும் கார்களை சிறிது தூரம் தள்ளி போக்குவரத்திற்க்கு இடைஞ்சலாக இல்லாமல் நிறுத்த முடியும். ஆனாலும் செய்ய மாட்டேன் என்கிறார்கள். கார்களை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்தால் என்ன ஆகிவிடும் ? உடலில் 10 கிலோ குறைந்து விடுமோ என்னவோ ?

இது பல விபத்துக்கள் நடப்பதற்க்கு முக்கிய காரணமாகவும் அமைகிறது. ஆனால், இதை யாரும் உன்னிப்பாக கவனித்துப் பொருட்படுத்துவதே இல்லை. இரண்டு வாகனங்கள் எதிர் எதிரே செல்லும் செல்லும் அளவு சாலையில் இடம் இருந்தும், ஒரு வாகனத்தை நிறுத்தி வைப்பதால், ஒரு வாகனம் மட்டுமே செல்ல இடம் இருக்கும். எதிர் எதிரே வரும் வாகனங்கள் யார் முதலில் இந்த இடத்தில் நுழைவது என்ற குழப்பத்தில் விபத்து நேர்ந்துவிடுகிறது. இவர்கள் இருவரும் குடுமிப்பிடி சண்டை போடுகிறார்கள். ஆனால், இந்த விபத்துக்கு மூல காரணமான, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் மறந்தே போய் விடுகிறார்கள்.

நிறைய ஆட்டோக்களும் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டோ, அல்லது சவாரி தேடி மெதுவாக சென்றோ சாலையின் உட்தடங்களை முடக்கி பல விபத்துக்கள் ஏற்பட காரணாக இருக்கிறது.

சென்ற ஆண்டு நந்தனம் அருகே நடைபெற்ற இந்த சாலை விபத்து காணொளியை கூர்ந்து கவனியுங்கள். காமிராவிற்க்கு முன்னால் இரண்டு வாகனங்கள், ஒன்று சரக்கு வேன் மற்றொன்று அவசர ஊர்தி போன்ற வாகனம், அவசரம் இல்லாத நிலையில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலை நான்கு தடங்கள் (Lanes) கொண்ட சாலையாக இருந்தாலும், இந்த இரண்டு வாகனமும் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு அந்த கடைசி தடங்கள் வாகன போக்குவரத்து செய்ய இயலாத படி முழுவதுமாக அந்த தடத்தை தடை செய்து விட்டது. அடுத்தது, பக்கத்து சாலையிலிருந்து பிரதான சாலைக்கு நுழையும் ஆட்டோவைக் கவனியுங்கள். வலதுபுறம் எத்தனை வேகமாக வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன? அது எதையுமே பொருட்படுத்தாது, அந்த ஆட்டோ ஓட்டுநர், இரண்டாவது தடத்தில் வேகமாக நுழைகிறார். பக்கத்து சிறிய சாலையிலிருந்து பிரதான சாலைக்குள் நுழைபவர்கள் நின்று, பின்னர் வலது புறம் பார்த்து, தாங்கள் நுழைவதால் எந்த வாகனத்திற்க்கும் தடங்கல் வராது என்பதை உறுதி செய்து கொண்டு நுழைய வேண்டும். ஆனால், இந்த ஆட்டோ ஓட்டுநர் எதையுமே சட்டை செய்யவில்லை. இந்நிலையில் அங்கே, இரண்டு இருசக்கர வாகனங்கள் விரைந்து வந்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இணையாக, அரசு பேரூந்தும் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. விரைந்து வந்து கொண்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ நுழைவதை சற்றும் எதிர்பாராமல், வலது புறம் செல்வதற்க்கு எத்தனிக்க, ஒரு வாகனத்தில் உள்ளவர் வெகு அருகில் வரக்கூடிய இரண்டு பேர் வரும் வாகனத்தின் மீது நிலை தடுமாறி விழ, அவர்களும் நிலைகுலைந்து அரசுப் பேரூந்து மீது விழுந்து இறந்தே விட்டார்கள்.

இது விபத்து என்று கருதப்பட்டு மூடப்பட்டுவிட்டது. இங்கு தப்பு செய்தவர்கள் யார் ? விபத்துக்கள் நடக்கும் இடங்கள் எல்லாம் கூர்ந்து கவனியுங்கள். சாலையை ஆக்கிமித்தும் வழி மறித்தும், சாலையின் உட்தடங்களை முழுமையாக மறித்தும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இதனால், ஏற்படும் வாகன நெறிசலை, அந்த வாகனத்தின் ஓட்டுநர் பக்கத்தில் நின்று டீ குடித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருப்பார். மேலே உள்ள சம்பவத்தில், சாலையை மறித்து நிறுத்தப்பட்ட அந்த இரண்டு வாகன உரிமையாளர்கள், மற்றும் வலது புறம் விரைந்து வரும் வாகனங்களைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக உள் நுழைந்து விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரும் கொலைக் குற்றவாளிகள் என்று கருதலாமா ? யாரோ அலட்சியமாக செய்யும் தவறுக்கு யாரோ இருவர் இறந்தே போய்விட்டார்களே. அவர்களைப் பெற்றவர்களும் குடும்பத்தாரும் எத்தனை வேதனை அனுபவித்திருப்பார்கள்? ஆனால், இந்தியாவில், இந்த குற்றவாளிகளாக கருதப்படலாம் என்பவர்கள் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படாமல், ஜாலியாக தப்பி விட்டார்களே.

தேசிய நெடுஞ்சாலையிலேயே சாலையின் உட்தடங்களை வழிமறித்து லாரியையும், கார்களையும் நிறுத்துகிறார்கள். எத்தனை ஆபத்து மிகுந்தது என்று தெரிந்தும் இப்படி நிறுத்தும் கோர மனப்பான்மை கொண்டவர்களை என்னவென்று சொல்வது ?

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் சாலைகள் மிக அகலமாக இருந்தும், சாலை முழுவதையும் பயன்படுத்த முடியாத அவல நிலை தான் காணப்படுகிறது. எல்லா பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து சாலைகளை முற்றிலுமாக முடக்கி, ஒரு சிறிய வழியை மட்டும் விட்டுவிட்டு மிகுந்த நெரிசலை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதனால் பலருக்கு எரிபொருள் வீணாகி, செலவுகள் அதிகரித்து, அவர்களுடைய நேரமும் உற்பத்தி அளவும், பொருளாதாரமும் வீணாகிறது.

காவல்துறை அதிகாரிகள் இதை உன்னிப்பாக கவனித்து, வெறும் மைக் கொண்டு சொல்லிக்கொண்டே செல்லாமல், சாலையை மறித்து வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு பெரிய அபராதத் தொகை விதித்து கட்டுப்படுத்த வேண்டும். கல்லூரியில் இருக்கும் தன்னார்வ அமைப்புக்கள் போன்றவற்றில் உள்ளவர்களையும் இந்த சேவைக்கு பயன்படுத்தலாம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு.

யார் இந்த பிரஷாந்த் கிஷோர்? 2021 சட்டப்பேரவை தேர்தல் திமுகவின் அரசியல் ஆலோசகராக நியமனம்.

யார் இந்த பிரஷாந்த் கிஷோர்? 2021 சட்டப்பேரவை தேர்தல் திமுகவின் அரசியல் ஆலோசகராக நியமனம்.

அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படுபவர் பிரசாந்த் கிஷோர். யார் இவர் ? இவரின் சாதனைகள் என்ன என்று பார்ப்போம்.

பீகார் மாநிலத்தில் உள்ள கோனார் என்ற கிராமத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்தார் பிரஷாந்த் கிஷோர். பள்ளிப் படிப்பையும் பொறியியல் பட்டப் படிப்பையும் முடித்த பிரஷாந்த், குஜராத்தில் முறையான அலுவலகம் ஏதும் இல்லாமல் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா பார்ட்டிக்கு வேலை செய்தார். தன்னுடைய நுட்பமான திறமையினால், மிக விரைவில் அந்த கட்சிக்கு அரசியல் ஆலோசகராக மாறினார். ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தலில் வெற்றி பெறுவது முதல் நல்ல ஆட்சி செய்வது வரை பல்வேறு ஆலோசனைகளையும் வியூகங்களையும் அமைத்துக் கொடுக்கும் வேலையில் மிகத் திறமையானவராக வலம் வந்தார்.

அவருடைய முதல் பெரிய வெற்றியாக அமைந்தது, 2011 ஆம் ஆண்டு திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக குஜராத் முதலமைச்சராக தேர்வு செய்வதற்கான பணிகளின் முக்கிய பங்களிப்பாகும். இதனால் 2012 ஆம் ஆண்டு திரு மோடி அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார்.

அதன் பின்னர் அவர் தனியாக சிஏஜி CAG (Citizens for Accountable Governance) என்ற நிறுவனத்தை நிறுவி, புதிய தேர்தல் பரப்புரை உத்திகளையும் வியூகங்களையும் கையாண்டு, 2014 ஆம் ஆண்டு திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்க உறுதுணையாக செயல் பட்டார். திரு மோடி அவர்களின் தேர்தல் பரப்புரைக் குழுவில் மிகவும் முக்கியமான ஆலோசகராக இருந்ததாக “நரேந்திர மோடி: தி மேன், தி டைம்ஸ்” என்ற நூலை எழுதிய நிலஞ்சன் முகாபத்யாயே குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் திரு மோடி அவர்களின் குழுவிலிருந்து விலகி, சிஏஜி யை, ஐ-பேக் I-PAC (Indian Political Action Committee) இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு என்ற அமைப்பாக உருமாற்றம் செய்தார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், பீகார் ஜனதாதள கட்சி நித்திஸ்குமார் அவர்களுக்கு ஆலோசனைகளும் வியூகங்களும் அமைத்துக் கொடுத்து அவர் மூன்றாவது முறையாக ஆட்சி பீடத்தில் அமர பங்களித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், நித்திஸ்குமார் பிரசாந்த் கிஷோரை தனது ஆலோசகராக நியமித்தார்.

பின்னர் இரண்டு முறை தொடர்ந்து தோல்வி அடைந்த பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங் அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைத்துக் கொடுத்தார். இந்த பங்களிப்பை பல காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டினார்கள்.

பின்னர் 2017 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தின் ஜகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டு தேர்தலில் மிகப் பெரிய வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தார்.

அரசியல் ஆலோசகராக, ஆம் ஆத்மி கட்சிக்கு 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் பங்கு கொண்டு 70 இடங்களில் 62 இடங்கள் வெற்றி பெற்று மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்டார்.

நித்திஸ்குமார் அவர்களின் குடியுரிமை சட்டத்திற்க்கான நிலையைப் பற்றி கருத்து தெரிவித்ததற்க்காக, சனவரி 29, 2020 அன்று, அவர் தனது கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோரை நீக்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில் தான் பிப்ரவரி 3, 2020 அன்று, வரக்கூடிய 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு அரசியல் ஆலோசகராக ஐ-பேக் பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம், பிரசாந்த் கிஷோர் அவர்களின் ஆலோசனையில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழ் இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்.

தமிழ் இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்.

இது நீங்கள் படிக்கும் இன்னும் ஒரு பதிவு அன்று. தமிழர்கள் ஆழ்ந்து சிந்தித்து மீண்டும் அலட்சியம் செய்து தூக்கத்திற்க்குப் போகாமல் உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது. இது ஒரு அபாய எச்சரிக்கை மணி.

இந்த சுய பரிசோதனையை இன்றே செய்து பாருங்கள். நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசி அல்லது பேசுவதை உங்கள் கைபேசியில் ஒலிப்பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதில் எத்தனை ஆங்கில வார்த்தைகள் எத்தனை தமிழ் வார்த்தைகள் இருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். 30-40 சதவிகிதத்திற்ககு மேல் தமிழ் வருகிறதா என்று பாருங்கள். மீண்டும் ஒரு முறை ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்து பாருங்கள். இன்னும் 10 சதவிகிதம் மட்டுமே முன்னேறும். பல வார்த்தைகளுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்றே தெரியாமல் திணறுவீர்கள்.

நாம் தமிழர், நான் திராவிடன், தமிழ் தொன்மையான மொழி, தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்றெல்லாம் வீர வசனம் பேசும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம் இது. கடந்த பல பத்தாண்டுகளில், எத்தனை அரசியல் கட்சிகள் தமிழை வைத்து அரசியல் செய்து விட்டன ? தமிழை வைத்து சம்பாதித்து விட்டன ? அவையெல்லாம் நம் தாய் மொழி தமிழை வளர்க்க ஏதாவது ஒரு சிறு துரும்பாவது முயற்சி செய்தனவா ? ஆங்கில கலப்பை தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி செய்தனவா ?

அடுத்த தலைமுறை அல்லது உங்கள் குழந்தைகளின் பேச்சை இதே பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் முடிவு இன்னும் அபாயகரமாக இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க என்ன சிரத்தை எடுத்தீர்கள் ? உங்களின் அடுத்த தலைமுறைக்கு எத்தனை தமிழ் போதிக்கப்படுகிறது. தமிழைத் துறந்து பிற முக்கிய பாடங்கள் படிக்க வேண்டும் என்று மருத்துவர், பொறியாளர் என்று படிக்க வைத்தவர்கள் எல்லாம் இன்று மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்க்கு வேலை செய்யும் நிலை. பொறியாளர்களின் நிலையோ இன்னும் மோசம்.

இன்னொரு பக்கம் தமிழில் பேசுவதை இழிவாகத் தானே கருதுவது. உலகிலேயே யாருக்குமே இல்லாத வியாதி இது. உலகில் இருக்கும் அனைவரும் தங்கள் மொழியில் பேசுவதை மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் மட்டும் இதற்குப் புறம்பாக இருக்கிறது. நம் தாழ்வு மனப்பான்மையை நன்றாகத் தூண்டி விட்டு, அதை பயன்படுத்திய பல காலம் அந்நிய ஆட்சி நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளாக நம்மை சீரழித்த அந்நிய ஆட்சியின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நாம் இன்னும் மீளவே இல்லை. முக்கியமாக நம் இளைய தலைமுறையினருக்கு, வெளிநாடு படங்கள், கதை புத்தகங்கள் சிறந்தவை என்றும் நம் நாட்டு பொருட்கள் உப்பில்லாதவை என்று தவறான கண்ணோட்டம் புகுத்தப்படுகிறது. வியாபார நோக்கத்திற்க்காக நம் ஆட்களே இதற்குத் துணை போகிறார்கள். ஆகவே, இளைஞர்கள், தவறான பாதையிலேயே வளர்ந்து நம் சமுதாயத்தைச் சீரழிக்கின்றனர். வயது வந்து முதிர்வு வந்த பின்னர், தமிழில் பேச முயன்றாலும் முடியாத இழிவான நிலை. கேவலம்.

உலகிலேயே உயர்ந்த நூல்கள் இருப்பது தமிழில் தான். நான்கு வேதங்கள் இருந்தது தமிழில் தான். எண்ணற்ற நுண்ணிய அறிவுப் புதையல்கள் இருப்பது தமிழில் தான். இயல் இசை நாடகம் என்று பிரிவுகளில் தமிழ் வளர்ந்தது இங்கே தான். சங்கம் வைத்து தமிழ் வளர்ந்தது உலகிலேயே இங்கு தான். எத்தனை எத்தனை அரிய நூல்கள் ? இத்தனை நூல்கள் இருந்தும், நம் இளையவர்கள் கேக்ஸ்பியர் நாவல் பற்றி பெருமையாக பேசுவது எத்தனை இழிவான நிலை ? கொடுமை. தமிழின் வளர்ச்சிக்கு எல்லாக் காலங்களிலும் ஆட்சி செய்யும் மன்னர்கள் துணை நின்றார்கள். ஆனால், சனநாயக ஆட்சியிலோ, தங்கள் அரியணையைத் தக்க வைப்பதிலேயே மன்னர்கள் காலம் போக்குகிறார்கள். அப்படி நல்ல நிலையில் இருந்தாலும், அலட்சியமாக இதைப் பற்றி எதுவும் செய்வதில்லை.

தெய்வம் பேசிய தமிழ், தெய்வத்தமிழ் என்றெல்லாம் பெருமை பேசுகிறோம். அப்படி தெய்வம் தமிழில் என்ன பேசியது என்று என்றைக்காவது கேட்டதுண்டா ? அலட்சியமே நம்மை அழிக்கும் முதல் எதிரி.

ஆங்கில கலப்பை நீக்கிப் பேச நாம் என்ன முயற்சி செய்யப் போகிறோம் ? நம் மன்னர்களாகிய அமைச்சர்கள் என்ன முயற்சி செய்யப்போகிறார்கள் ? பேசுவதில் பலனில்லை. அவற்றை நடைமுறைப்படுத்தி மேம்படுத்தி சாதித்துக் காட்ட வேண்டும்.

ஒவ்வொருவரும் ஆங்கிலக் கலப்பு நீக்கி பேச முயற்சி செய்ய வேண்டும். பல ஆங்கில வார்தைதகளுக்குத் தமிழ் வார்த்தைகள் தேட வேண்டும். அவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். பழக பழக சில மாதங்களில் ஆங்கிலம் நீக்கி கட்டாயமாக நாம் பேச இயலும். சித்தரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டிலும், அலுவலகத்திலும், நட்பு வட்டங்களிலும், உறவு வட்டங்களிலும் ஆங்கிலம் கலவாத தமிழ் பேச முயற்சி செய்யுங்கள். உங்கள் அடுத்த தலைமுறைக்கு மறவாமல் நல்ல தமிழ் பேச எழுத பயிற்சி கொடுங்கள். நீங்கள் வீட்டில் அவர்களோடு நல்ல தமிழில் பேசினாலே, அது அவர்களுக்குச் சிறந்த பயிற்சி. அதை விட வேறு பயிற்சி தேவையில்லை.

இதோ அபாய எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது.