வஜ்ரா 6 ஆவது கடற்படை ரோந்து வாகனம் நாட்டுக்காக அர்ப்பணிப்பு

வஜ்ரா 6 ஆவது கடற்படை ரோந்து வாகனம் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் நடந்த விழா ஒன்றில் எல்அன்டி இன் 6 வது தயாரிப்பான வஜ்ரா என்ற கடற்படை ரோந்துக் கப்பல் பிப்ரவரி 27 அன்று திருமதி கீதா மாண்டவ்யா அவர்களால் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. திருமதி கீதா மாண்டவ்யா கப்பல் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவ்யா அவர்களின் மனைவியாவார்.

2015 ஆம் ஆண்டு எல்அன்டி நிறுவனம் மொத்தம் ஏழு கடற்படை ரோந்து வாகனம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை 1432 கோடி ரூபாய்க்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து பெற்றது. இதற்கு முன்னர் நான்கு ரோந்து வாகனங்களைக் கட்டமைத்து அர்ப்பணித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31, 2019 அன்று ஐந்தாவது வாகனத்தை நாட்டுக்காக அர்ப்பணித்தது. இந்த நிலையில் 6 ஆவது வாகனத்தின் கட்டமைப்பு முடிவுற்ற நிலையில் இன்று இந்த வஜ்ராவை நாட்டுக்காக அர்ப்பணித்தது.

இந்த வாகனம் விக்ரம் வாகன அமைப்பைச் சேர்ந்தது. இவை பெரிய தள அமைப்பு கொண்டவை. இதில் ஹெலிகாப்டர் ஏறும் இறங்கும் வசதி உண்டு. இது இந்திய கடல் எல்லைகள் மற்றும் தீவுகளுக்குச் சென்று பணியாற்றும் திறன் கொண்டது. கடற்கரை பாதுகாப்பு ரோந்து பணிகளைச் செய்யவும், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு வேலைகளைச் செய்யவும் கடத்தல் போன்ற செயல்களைக் கண்காணித்து தடுக்கவும், போர் நேரங்களில் சில பயன்பாடுகளுக்கு மட்டுமான பணிகளுக்கு இது பயன்படுகிறது.

97 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலும் 2140 டன் எடையும் கொண்ட இந்த கப்பல் மணிக்கு 26 நாட்டிக்கல் மைல் வேகம் செல்லக்கூடியது. இதில் 30 mm CRN 91 கடற்படை துப்பாக்கிகளும் இரண்டு 12.7 mm கனரக துப்பாக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/mansukhmandviya/status/1232915225600352256

வீட்டில் செல்வம் கொழிக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் செல்வம் கொழிக்க என்ன செய்ய வேண்டும்?

சகல அண்ட புவனங்களையும் தன்னுள் கொண்டு காத்தருளும், தனக்கு நிகரற்ற தெய்வம் சிவபெருமானின் ஆணையின் கீழ், அனைத்துலகும் இயங்கி வருகிறது. சிவபெருமான் ஒருவனே பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரே கடவுளாகத் திகழ்கிறான். இந்து சமயத்தில் கடவுளுக்கும் தெய்வத்திற்க்கும் உரிய வேறுபாடு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா உயிர்க்குத் தேவையானவற்றையும், பொருளையும், இன்பத்தையும் தன் அளப்பரிய கருணையினால் தக்க சமயத்தில் கொடுத்து அருள எல்லா ஆலயங்களிலும் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிவம் நம்மை உய்விக்கும் தெய்வம். ஆணவத்தை வேற்றுத்து நிகரற்ற பேரின்பத்தை எப்போதும் வழங்கும் தன்மையுடைய ஒரே கருணை தெய்வம் சிவபெருமான். திக்குத் தெரியாமல் தவித்துப் புலம்பும் எல்லா உயிர்களுக்கும் தெப்பமாக தானே வந்து காத்தருளி நம்மை உய்விக்கிறான். அவ்வாறு இவ்வுலக உயிர்களுக்கு வாழ்விற்க்குத் தேவையான செல்வங்கள் அனைத்தையும் மகாலட்சுமிக்கு அருளி, செல்வத்திற்கெல்லாம் தெய்வமாக அவளை நியமித்தருளினார். மகாலட்சுமி சிவபெருமானின் திருவருளால் எட்டு சக்திகளைப் பெற்றார். தனம், தான்யம், சந்தானம் உள்ளடக்கிய எட்டு சக்திகளையும் சங்கநிதி பதுமநிதி என இருவரிடம் ஒப்படைத்தார். இந்த செல்வங்கள் யாவையும் கணக்கு பார்த்து தேவையான செல்வத்தை தேவையானவர்களுக்கு வழங்க ஒருவர் வந்து சேர்ந்தார். அவரே குபேரன்.

குபேரன் யார் ?

திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்க்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் சொல்கிறது. சிவபிரானுக்கு இரண்டு நெருங்கிய தோழர்கள். ஒன்று சுந்தரமூர்த்தி நாயனார். இன்னொருவர் குபேரன். பிரம்மாவின் மனதில் தோன்றியவர் புலஸ்தியர். இவருடைய பிள்ளைகள் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பநகை, வீபீஷணன் மற்றும் குபேரன். குபேரனும் இராவணனும் சிறந்த சிவபக்தர்கள். குபேரன் சிவபிரானிடம் தவம் செய்து அருள் பெற்றார். மேலும் வடக்கு திசைக்கு உரிய அதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இந்த குபேரனிடம் தான் மகாலட்சுமி தான் சிவபெருமானிடம் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைத்தார். குபேரன் அரசாட்சி செய்ய அழகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பி விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அதில் ஓர் அதிசய அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி மீன் ஆசனத்தில் போடப்பட்ட மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினார். கிரீடம், தங்க ஆபரணங்கள் அணிந்து முத்துக் குடையின் கீழ் அமர்ந்து கையில் அபய முத்திரை காட்டுகிறார். யார் யாருக்கு என்ன செல்வம் போய்ச் சேர வேண்டுமோ, அவற்றை சரியாக சமர்பிப்பதே இவர் வேலை. மேலும் பாவங்கள் செய்யாதிருப்பவர்களை கோடீஸ்வரானாக்குவதும் இவரது பணியாகும். இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும் இடதுபுறத்தில் பதுமநிதியும் அமர்ந்து உதவிபுரிவார்கள்.

சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவர். இவரது கை வர முத்திரை தாங்கி இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்களாகும்.

குபேரனின் உருவ அமைப்பு

குபேரன், சிறுத்த சிவந்த உருவமும் பருத்த வடிவமும் கொண்டவர். இவரது துணைவி சித்ரலேகா. தலையில் கிரீடம் ஆபரணங்கள் அணிந்து முத்துக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் குபேரன் அமர்ந்திருக்கிறார். அந்தச் சிம்மாசனம் தாமரை மலர் மீது மீனாசனம் அமைத்து அதன் மேல் மெத்தை விரிக்கப்பட்டிருக்கும்.அவர் காலின் கீழ் அவரது வாகனமான குதிரை இருக்கும்.குபேரனின் ஒரு கை அபயமுத்திரையைக் காட்டும். இன்னொரு கை பாம்புக்குப் பகைவனான கீரியைத் தொட்டுக் கொண்டிருக்கும். சில சித்திரங்களில் கீரிக்குப் பதிலாக கைக்குடை ஒன்றை வைத்திருப்பார். இது இறைத்தன்மைக்குரிய, அதாவது அரசனுக்குரிய அடையாளம். குபேரன் எங்கு பறந்து சென்றாலும் தங்கம், முத்து ஆகியவை வழி நெடுக சிதறிக் கொண்டே போகும் என்பார்கள்.

அவர் தன் வாய் வழியே ரத்தினங்களை உமிழ்ந்து செல்வதாலேயே இது நடைபெறுகிறது. குபேரனின் வலப்புறத்தில் சங்கநிதியும் இடப்புறத்தில் பது மநிதியும் வீற்றிருக்கிறார்கள். கீழே உள்ள பாத்திரங்களில் நவரத்தினக் குவியல்கள் காணப்படும். அதோடு குபேர யந்திரத்துடன் குபேரன் காட்சியளிக்கிறார்.

குபேரனுக்கு மொத்தம் ஒன்பது பொருளாளர்கள் உள்ளனர். குபேரன் ஒரு சமயம் எல்லா சிவாலயங்களுக்கும் தன் புஷ்பக விமானத்தில் சென்று வழிபட்டுச் சென்று கொண்டிருந்தான். ஒரு முறை காவேரி நதிக்கரையில் மான், புலி, பசு, யானை, பாம்பு மற்றும் எலி ஆகியவை ஒரே இடத்தில் தங்கள் பகைமை கணங்களைக் காட்டாமல் நீர் அருந்திக் கொண்டிருந்தன.

ஆகா, இந்த ஊர் எவ்வளவு அழகாக இருக்கிறது. இங்கு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்தான். அவ்வளவு தான், அந்த விருப்பத்தை நிறைவேற்ற சிவபெருமானார் அவருக்கு ஒரு பிறவி கொடுத்து விட்டார். அந்த நதிக்கரையருகே ஓர் இலந்தை மரமும் இருந்தது. இலந்தை மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வெளியே எடுத்து முறையாக நீ என்னை வழி பட்டா யானால், உனக்கு அளவிலாத நன்மைகள் கிடைக்கும். என்னை வழிபடுபவர்களுக்கு உன் அருள் கடாட்சமும் கிட்டும் என்றவாறே சிவபெருமான் திடீரென குபேரன் முன் தோன்றினார்.

ஈசன் கூறியவாறே குபேரனும் அவரை வெளியே எடுத்து வழிபாடு செய்தான். தன் பெயர் அளகேசன் என்ற நாமம் கொண்டு விளங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டான். சிவனும் சம்மதித்தார். குபேரன் வழிபட்ட அந்தச் சிவன் கோவில் பவானியில் உள்ளது. அது பவானி சங்கமேஸ்வரர் கோவில். எனவே தீபாவளியன்று இத்தலத்தில் வழிபட்டால் அளவற்ற செல்வமும் அருளும் பெறலாம்.

ஆகவே, குபேரனை எண்ணத்தில் கொண்டு சிவபெருமானை தினம் வணங்கி வந்தால் உங்கள் இல்லத்தில் செல்வம் கொழிக்கும். புதிய வீடு, வாகனம் பெறுவீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். வறுமையும் தரித்திரியமும் தெறித்து காணாமல் ஓடி விடும். கேட்டதெல்லாம் கொடுக்கும் தெய்வம் சிவபிரான். இந்த பிறவியில் செழித்து வாழ நல்ல செல்வமும் மறுபிறவி வேண்டாதவர்க்கு பிறவிப் பிணியை நீக்கி பேரின்ப முக்தியும் கொடுத்து அருளுவார். ஆகவே, சிவபெருமான் மீது அன்பு கொண்டு அவரை வணங்கி வர, அனைத்து தீவினைகளும் அகன்று, சர்வ செல்வங்களும் நமக்குக் கிட்டும் என்று நம் ஞானிகள் அருளியுள்ளனர்.

அன்பு நெறியை உலகில் பரவியது யார்?

அன்பு நெறியை உலகில் பரவியது யார்?

அன்பு நெறியை வழுவாமல் கடைப்பிடிப்பது யார் ?  அன்பை பற்றி யாருக்கு யார் போதனை செய்ய வேண்டும் ? 

இயற்கை வளம் சூழ்ந்த பறம்பு மலையை சுற்றி முன்னூறு ஊர்களைக் கொண்டது பறம்பு நாடு. அந்த நாட்டை ஆண்ட மன்னர் வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினார். அவரது நாட்டில் இரவலர்களே இல்லாமல் போயினர். மக்கள் அனைவரும் அவரைப் புகழ்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஓர் நாள் பறம்பு மலையைப் பார்க்க தன் தேரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் அந்த மன்னர். அருவிகளின் ஓசை, மலையின் அழகு என்று இயற்கையின் அத்தனை அழகையும் ரசித்துக் கொண்டே வந்தார். மலைப்பகுதி வந்தவுடன் தன்னுடைய அலங்கரிக்கப்பட்ட தேரிலிருந்த மணிகள் அத்தனையும் அகற்றச் சொன்னார். காரணம், அந்த சத்தத்தைக் கேட்டு விலங்குகள் அஞ்சி ஓடாமலிருக்க. மான்கள், மயில்கள், வண்டுகள், தும்பிக்கள் என்று அனைத்தையும் பார்த்து மகிழ்ச்சியுற்றார் மன்னர். தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது.

ஆங்கே, ஓரிடத்தில் முல்லைக் கொடி ஒன்றுக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் அந்தக் கொடி காற்றில் அங்கும் இங்கும் ஆடி அலைந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சியைக் கண்ட மன்னரின் உள்ளத்தில் அந்த முல்லைக் கொடியின் உணர்வுகள் அப்படியே தன் உணர்வுகளாய் உள்ளத்தில் பாய்ந்து, அந்தக் கொடியின் மீது இருந்த அன்பினால் அவர் உள்ளம் துடிதுடித்தது. ஆ என்று அலறி தேரிலிருந்து குதித்தார். முல்லைக் கொடியின் அருகில் சென்று தள்ளாடித் தவிக்கும் அந்த கொடியைப் பார்த்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பி வழிந்தோடியது. முல்லைக் கொடியின் உணர்வுகளை மன்னர் தன்னுடைய உணர்வாக உணர்ந்து அழுதார். முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும் அசைந்து துன்புறுகிறாய். இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே.

மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே. என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.

முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர்.

பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார். தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி.

குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர். குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின.

முல்லைக் கொடியின் அருகே நின்றார். அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார்.
தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது. அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது.

எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார். இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள். அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள்.

மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார். இன்னும் எத்தனை எத்தனை வள்ளல்கள் வாழ்ந்த மண் இது ? நியாயம் கேட்ட கன்றுக்காகத் தன் மகன் இளவரசனையே தேரில் ஏற்றி நீதியை நிலை நாட்டி திருவாரூரில் வாழ்ந்தவன் மனுநீதிச் சோழன். இவ்வாறு எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்தி அன்பே சிவம் என்று வாழ்ந்தது இந்த பாரத பூமி. எத்தனை பெருமை வாய்ந்தது நம் புண்ணிய பூமி ? அந்தப் புண்ணிய பூமியில் நாம் பிறந்து வளர எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் ?

ஆனால், இன்றோ, பல்வேறு தாக்குதல்கள் காரணமாக நம் பழம்பெருமை மறந்து உயிர்களைக் கொன்று அதன் சதையைப் பிய்த்துத் தின்று விட்டு, இது அன்பு நெறி, இவர் அன்பானவர் என்று நமக்குப் போதிக்கப் படுகிறது.

நம் பழமையையும் பெருமையையும் மறக்கடிக்கச் செய்தும், திரித்து எழுதச் செய்தும் நம்மை வேறு உலகிற்கு அடிமையாக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றையெல்லாம் உணர்ந்து அன்பே சிவம் என்றுரைத்த திருமூலர் திருமந்திரம், திருக்குறள் போன்ற நம் அறநூல்களையும் சமய நூல்களையும் கற்று நல்வழியில் பயணம் செய்வோம்.

கோவிட்-19 கொரோனா வைரஸ் பரவாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

கோவிட்-19 கொரோனா வைரஸ் பரவாமலிருக்க என்ன செய்ய வேண்டும் ?

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய்க்கு சீனாவிலும் பல்வேறு நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கானோரை இந்த நோய் பாதித்துள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்குகிறது இந்த செய்தி.

கோவிட்-19 நாவல் கொரோனா வைரஸ் என்பது பெரிய குடும்பமான கொரோனா வைரஸ்கள் (CoV) ஒரு புதிய ரகமாகும். இது சளி முதல் மிகவும் ஆபத்தான பல சுவாசக் கோளாறுகளை உருவாக்கி விடும். இது வரை, மனிதர்களிடம் இந்த நோய்க்கான அறிகுறிகள் காணப்படவில்லை. அவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் கிருமியாக உள்ளது. இனி, இந்த நோய் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

என்ன செய்ய வேண்டும் ?

உங்கள் உடலையும் சுற்றுப்புறத்தையும் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்.

இருமல் அல்லது தும்மும்போது வாயை மூடிக் கொள்ள வேண்டும். இதனால், உங்களிடம் இருந்து மற்றும் பலருக்கு இந்த நோய் பரவாமல் தடுக்கலாம்.

இருமல் அல்லது மூக்கு ஒழுகுவது போன்ற சுவாச அறிகுறிகள் இருந்தால் முகமூடியை அணிந்து கொள்ளுங்கள்.

ஏதாவது சந்தேகம் இருந்தாலோ, உடல் நலம் இல்லாதது போல உணர்ந்தாலோ, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

சீனாவில் இருந்து இந்தியாவிற்க்கு வந்திருந்தால், உடனே அரசு மருத்துவமனையை அணுகி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

என்ன செய்யக் கூடாது ?

நோய்வாய்ப்பட்டது போல் உணர்ந்தால், எங்கும் பயணம் செய்ய வேண்டாம். பயண திட்டங்களைக் கைவிட்டு விடுங்கள்.

சீனாவிற்க்கு பயணம் செய்வதைத் தவிருங்கள்.

உடல்நிலை சரியில்லாத நண்பர்களுடனோ, கூட்டத்திலோ இருப்பதைத் தவிர்க்கவும். நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

விலங்குகளை நேரடியாகத் தொடுவதோ கொஞ்சுவதோ செய்ய வேண்டாம். மேலும் சமைத்த இறைச்சிகளை உண்பதைத் தவிர்க்கவும்.

விலங்கு மற்றும் பறவைப் பண்ணைகள், நேரடி விலங்கு சந்தைகள் அல்லது விலங்குகள் படுகொலை செய்யப்படும் இடங்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும்

௧௨௩௪௫௬௭௮௯ இதெல்லாம் என்ன?

௧௨௩௪௫௬௭௮௯ இதெல்லாம் என்ன?

நம் தமிழ் எண்கள் தான்.

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

என்பார் ஔவையார்.

குறள் 392:

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 

கண்ணென்ப வாழும் உயிர்க்கு

என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமான் வாக்கு. அத்தகைய கண்கள் போன்ற நம்முடைய தமிழ் எண்களை நாம் இன்று பயன்படுத்துகிறோமா ? முதலில் அந்த எண் வடிவங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோமா ?  உலகின் மூத்த மொழி என்ற பெருமை உடைய நம் தமிழ் மொழியின் எண்களை நாமே பயன்படுத்தாவிட்டால், அமெரிக்கர்களும் உருஷ்யர்களுமா பயன்படுத்துவார்கள் ?  இந்த கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்கே கேட்டுக் கொண்டு, அதற்கான நம் கடமைகளை உணர்ந்து செய்ய வேண்டும். ஆகவே, தமிழ் எண்களின் உருவங்களை அறிந்து கொண்டு, அதை எளிதாக மனனம் செய்வதற்குரிய வழிகளைப் பின்பற்றி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், நம் எண்களுக்கு உயிர் வந்து விடும். இந்த முயற்சியை நம்மிலிருந்தே தொடங்குவோம். அதற்கான கருவி தான் இந்த காணொளியும், படங்களும்.

இந்த படங்கள் எளிதாக கற்பதற்க்கும், பயிற்சி பெற்று பயன்படுத்துவதற்க்கும்.